மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.
அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஒரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இத்தகைய பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி முதல் விழாவாக சந்திர சேகர கொடியேற்றம் நடைபெற்றது. விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். கொடி மரத்திற்கு பல்வேறு திரவிய பொடிகள் பால் இளநீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, கொடிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவில் குமரக்கட்டளை தம்பிரான் சுவாமிகள் கோயில் நிர்வாகத்தினர், கோயில் குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் கோயில் குருக்கள் செய்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் தேரோட்டம் மற்றும் எமனை வதம் செய்யும் எம சம்ஹாரம் புராண நிகழ்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்