IPL 2023: கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள பணமற்ற ஏழை இளைஞர்களுக்கு உதவும் வகையில் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் உதவிகளைச் செய்து வருகிறார்.
ஐபிஎல் போட்டி இந்தியாவில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காட்டி வருகிறது. அப்படி ஏராளாமானோர் ஊடக வெளிச்சத்திற்கு வந்து இருந்தாலும், சமீபத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருபவர் ரிங்கு சிங். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் பறக்கவிட்டு கொல்கத்தா அணியை வெற்றி பெறச்செய்தது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரமே பேசும் அளவிற்கு முன்னேறினார்.
அதன் பின்னர் தான் ரிங்கு சிங்கின் பின்னணி குறித்து ஊடகங்கள் தேடத் தொடங்கின. இதனால், அவரது பின்னணி குறித்த வெளிவந்த தகவல்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது ரிங்கு சிங்கின் தந்தை கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்து வந்திருக்கிறார். குடும்பத்தில் இருந்த பொருளாதார நெருக்கடியால், ரிங்குவையும் கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல், ரிங்குவிற்கு கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தினை கண்டறிந்த அவரது தந்தை, ரிங்குவை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னர் தனது திறமையான ஆட்டத்தினால், தற்போது ஐபிஎல் வரை உயர்ந்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி இவரை 10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. அதன் பின்னர், அடுத்த ஆண்டு 80 லட்சத்துக்கு கொல்கத்தா அணி அவரை ஏலத்திற்கு எடுத்தது. தற்போது பொருளாதார ரீதியாக உயர்ந்துள்ள ரிங்கு சிங், தன்னைப் போல் மிகவும் நலிந்த பொருளாதாரப் பின்னணியில் இருந்து கொண்டு கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவும் வகையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார் நகரில் தங்கும் விடுதி ஒன்றினைக் கட்ட, ரூபாய் 50 லட்சம் வழங்கியுள்ளார். அதாவது அந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட கிரிக்கெட் பயிற்சி பள்ளிக்குச் சொந்தமான 15 நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் தங்கும் விடுதியை கட்டப்படவுள்ளது.
இது குறித்து ரிங்கு வின் பயிற்சியாளர், மசூதுஸ் - ஜாபர் அமினி கூறுகையில், “ ரிங்கு மிகவும் நலிந்த பொருளாதாரப் பின்னணியில் இருந்து வளர்ந்தவர் என்பதால், தன்னைப் போல் யாரும் சிரமப்படக்கூடாது என்பதற்காக இந்த நவீன வசதியுடன் கூடிய தங்கும் விடுதியை கட்ட முன்வந்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
இதுவரை ஐபிஎல்லில் 22 போட்டிகளில் விளையாடி, 20 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள ரிங்கு சிங், 425 ரன்கள் எடுத்துள்ளார். இதில், இவரது ஆவரேஜ் ஸ்கோர் 141.67 ஆக உள்ளது. 32 பவுண்டரி மற்றும் 22 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ள இவர் ஒரு அரைசதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.