பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சி:


சென்னை ராயப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகையொட்டி 1000 இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பல்வேறு கேள்விகள் எழுப்பட்டது. அதில், திமுக பிரமுகர்களின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட்டது குறித்தும் கேட்கப்பட்டது.


”அண்ணாமலை செய்தது காமெடி”


அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "என்ன என்கிட்ட மட்டும் இவ்வளவு கேள்வி கேட்கறீங்க. அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்திக்கும் போது மட்டும் ஸ்கூல் டீச்சர் மாதிரி பேசுவதை மட்டும் கேட்டுட்டு வரீங்க. அண்ணாமலை ஆதாரமற்று ஏதேதோ பேசி வருகிறார். அவர் மீது நானும் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். திமுக மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அண்ணாமலையை அதெப்படி சும்மா விடுவோம். அண்ணாமலை செய்வதெல்லாம் காமெடி டைம் தான்" என்றும் விமர்சித்தார்.


திமுக ஃபைல்ஸ்:


கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, குறிப்பிட்ட திமுக பிரமுகர்கள் ஊழல் மூலம் 1.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டி அதுதொடர்பான விவரங்களையும் வெளியிட்டார். தொடர்ந்து, மாதத்திற்கு ஆகும் ரூ.8 லட்சம் வரையிலான தனக்கான செலவுகளை தனது நண்பர்கள் தான் செய்வதாகவும், ரூ.3 லட்சத்திற்கு ரஃபேல் வாட்ச் வாங்கியதாகவும் கூறி அதற்கான பில் என கூறி ஒரு சீட்டையும் வெளியிட்டார். அதைதொடர்ந்து திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். 


திமுக சட்டநடவடிக்கை:


அண்ணாமலை குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டதுடன், 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். அந்த நிதி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க, தங்கள் தரப்பு விரும்புவதாகவும், தவறினால் தங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு  தொடரப்படும் எனவும், அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 


அண்ணாமலை அனுப்பிய நோட்டீஸ்:


திமுகவின் நடவடிக்கைக்கு எதிராக அண்ணாமலையும் வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பினார். அதில், என் மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு, ரூபாய் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன். இதை நான் PM Cares நிதிக்கு செலுத்த விரும்புகிறேன், என திமுகவிற்கான நோட்டீஸில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் தான், அணணாமலை மீது, தானும் சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.