பிரசித்தி பெற்ற பழமையான கீழமாரியம்மன் திருக்கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆறுபாதி கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமையான கீழமாரியம்மன் திருக்கோயில். இந்த ஆலயத்தில் பக்தர்கள் வேண்டிய வரங்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு சித்திரை பெருவிழா கடந்த மாதம் ஏப்ரல் 23 -ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது.
கோயில் ஆண்டுத் திருவிழா
அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. இதன் இடையே, விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்றிரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் முன்னே செல்ல ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
படையெடுத்த பக்தர்கள்
அதனைத் தொடர்ந்து 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர் ஒருவர் பக்தி பரவசத்துடன் தீமிதித்த காட்சி அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தீமிதி நிகழ்வை தொடர்ந்து சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.