Agni Natchathiram 2024: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கினாலும், கடந்த சில தினங்களாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது.


அக்னி நட்சத்திரம்:


வழக்கமாக கோடை காலம் என்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் தமிழ்நாட்டில் வெயில் மிக கடுமையாக வாட்டி வதைக்கும். பஞ்சாங்கத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை தான் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நீடிக்க உள்ளது. அதேசமயம், கடந்த மார்ச் மாதம் முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் ஏற்கனவே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வெப்ப அலையும் வீசி வருகிறது. 


பொதுமக்களே உஷார்:


இந்நிலையில் கத்திரி வெயில் தொடங்குவதால், அடுத்த 25 நாட்களுக்கு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விடவும் அதிகமாக இருக்கக் கூடும்.  அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  எனவே அவசியமின்றி மக்கள் பகல் பொழுதில் வெளியே வருவதை தவிர்க்கலாம். வெளியே செல்லும்போது குடையுடன் செல்வது நல்லது. மேலும் துணியால் முகத்தை மூடியபடியும் பயணிக்கலாம். மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பது நல்லது. அதிகப்படியான தண்ணீரை பருகுவது உங்கள் உடல் சூட்டை குறைக்கும். அதோடு,  பழங்கள், செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படாத பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பழரசம் உள்ளிட்டவற்றை அருந்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உப்பு கலந்த எலுமிச்சை சாறு சாப்பிடலாம். சப்ஜா விதை, பாதாம் பிசின் உள்ளிட்டவற்றை சேர்த்த பழரசம், எலுமிச்சை சாறு ஆகியவற்றையும் அருந்தலாம். 


சிட்ரஸ் சத்து மிகுந்த பழங்கள்


எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய் உள்ளிட்ட பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த வகை பழங்களைச் சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. 


 கோடை காலத்திற்கான சில டிப்ஸ்:



  • மதிய நேரத்தில் (12.00P.M-3.00P.M ) வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். 

  • அவசியம் இல்லையெனில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம்

  •  தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

  •  அதிக உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளை மதிய நேரங்களில் செய்வதைத் தவிர்க்கவும்.

  •  வெளியே செல்லும்போது எப்போதும் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச்செல்வதை பழக்கமாக்கி கொள்ளவும்.

  •  குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும்.

  •  உடல் சோர்வுற்றலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.

  •  மோர், எலுமிச்சை தண்ணீர் போன்ற வீட்டில் செய்யும் பானங்களைப் பருக வேண்டும். அதிகம் சர்க்கரை உள்ள கடைகளில் கிடைக்கும் குளிர்பானங்கள் வேண்டாம்.

  • பருத்தி ஆடைகளை அணியலாம். காற்றோட்டமான உடைகள் அணிவது நல்லது. 

  • காலை, இரவு என இரண்டு வேளையும் குளிக்கலாம். அதிகம் ரசாயனம் கலந்த சோப்களை பயன்படுத்த வேண்டாம்.

  • இயற்கையான கடலை மாவு, பயித்த மாவு வகைகளை குளிக்க பயன்படுத்தலாம்.