கீழ் புத்துப்பட்டு ஸ்ரீ மஞ்சனீஸ்வரர் கோவில்


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கும் புதுச்சேரிக்கும் நடுவே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்குள் ஸ்ரீ மஞ்சனீஸ்வரர் என்ற ஈஸ்வர பட்டத்துடன் பூரணை புஷ்கலை சமேத அய்யனாராக அருளுகிறார்.


மஞ்சனீஸ்வரர் அவதார நேரத்தில் இருந்த பெருமாள்


இக்கோவில் ஐவேலங்காடு என்று அழைக்கப்படும் பச்சை மூலிகைகள் நிறைந்த காட்டின் நடுவில் ராஜ கோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. மரங்கள் நிறைந்த நடு காட்டுக்குள் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயில் சன்னிதியில் பூரணை, புஷ்கலையுடன் அய்யனார் மஞ்சனீஸ்வரர் என்ற பெயரில் அமர்ந்துள்ளார். நுழைவு வாயில் முன்புறம் பலிபீடமும் யானை வாகனமும் உள்ளது. கோயிலுக்குள் சுப்ரமணியர் சன்னதியும், தெற்கே விக்னேஸ்வரர் சன்னதி என தனித்தனி கோயில்களாக உள்ளன. மஞ்சனீஸ்வரர் அவதார நேரத்தில் இருந்த பெருமாள் சன்னதியும் இங்கே உண்டு.


கோயிலின் பின்புறம் மேற்கில் குதிரைக் கோயில், புத்துக் கோயில், நாகாத்தம்மன் கோயில், விநாயகர் கோயில்கள் அமைந்துள்ளன. கோயிலுக்கு முன்புறம் நுழைவதற்கு முன்பாக மஞ்சனீஸ்வரரின் நண்பரும் காவலருமான மலையாளத்தார் சன்னதி அமைந்துள்ளது.


நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட வேண்டும்


பஸ்மாசுரன் எனும் அரக்கன் தன்னை யாரும் வெல்ல முடியாத பலத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டுமென்று நாரதரிடம் கேட்டான். அவர் ஈஸ்வரனை வேண்டி தவம் செய்யச் சொன்னார். அதன்படி தவம் செய்த பஸ்மாசுரன், தன் முன்னால் தோன்றிய ஈசனிடம், நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். வரத்தைச் சோதிப்பதற்காக அதைக் கொடுத்த ஈஸ்வரனின் தலையிலேயே கை வைக்க நெருங்கினான் பஸ்மாசுரன். வருத்தப்பட்ட ஈஸ்வரன்  அருகிலிருந்த ஐவேலங்காட்டில் ஒரு மரத்தில் காயாக மாறினார். அரக்கனும் ஆடு உருவம் கொண்டு காய்களைத் தின்னத் தொடங்கினான். ஈசன் ஒரு கட்டத்தில் கிருஷ்ணனை அழைத்தார். பரமாத்மாவான திருமால், மோகினி வடிவில் தோன்றினார். பெண்ணைக் கண்டு மோகம் கொண்ட பஸ்மாசூரன் மோகினியை வேட்கையோடு நெருங்கினான்.


தவம் செய்யப் புற்றுக்குள் இருந்தவன் உடலெல்லாம் மண் சேறும் சகதியுமாக இருந்தது. பஸ்மாசுரனிடம் உடலை கழுவிக்கொண்டு வரச் சொன்னாள் மோகினி. அவனும் அருகிலுள்ள கழுவெளி என்னும் நீர்நிலைக்குச் சென்று கை, கால்களைக் கழுவிக்கொண்டு, தலையைத் துடைக்கக் கைகளைத் தலைமீது வைத்த போது வரத்தால் எரிந்து சாம்பாலனான்.


திருமாலின் மோகினி அவதாரத்தின் நினைவாகக் காவல் தெய்வமாக அய்யனார் என்ற சிவசக்தியுருவை உருவாக்கினார். அந்த அய்யனார் உருவான தலம் இதுவாகும். குழந்தை வடிவில் இருந்த இவரை தேவகுரு பந்தளராஜா வேட்டைக்குச் செல்லும் வழியில் கொண்டு வைத்தார். பந்தளராஜன் அவரை எடுத்து வளர்த்து சகல வித்தைகளும் பயிற்றுவித்து சிறக்கச் செய்தார். மலையாள நாட்டில் சிறுவன் ஐயப்பனாக வாசம் செய்து மீண்டும் வாலிபப் பருவத்தில் இத்தலத்திற்கே திரும்பினார் என்று வரலாறு.


காவல் தெய்வமாக அய்யனார் உருவானது எப்படி ?


இலவஞ்சி நாட்டு அரசன் மகள் பூரணையையும், நோபாள தேசத்து அரசன் பிகரஞ்சன் மகள் புஷ்கலாம்பிகையையும் மணந்தார். திருமணத்தில் கலந்துகொண்ட திருமால், காக்கும் தெய்வமாக இங்கிருந்து உலகைக் காவல் காத்து வரப் பணித்தார். தலையில் தெளித்துக்கொள்ளும் புனித நீர் மஞ்சனநீர் எனப்படும். பஸ்மாசுரன் தலையில் தெளித்துக் கொண்ட நீரால் தீயது அழிந்து, உலகைக் காக்கும் காவல் தெய்வமாக அய்யனார் உருவானதால், மஞ்சனீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.


காட்டில் புற்றுகள் நிறைந்த கீழ்புத்துப்பட்டு என்னும் அந்த வனத்திலேயே கோவில் கொண்டார். உலகைக் காவல் காக்கும் பணி இருப்பதால் கோயிலில் சூரிய அஸ்தமனம் வரை இருந்து மக்களுக்கு அருள் செய்து பிறகு வானுலகம் சென்று தேவர்கள் முனிவர்கள் போன்றோர் அளிக்கும் பூஜையை ஏற்று நள்ளிரவில் தன் வெள்ளைக் குதிரையில் ஏறி, பரிவாரங்களும் உதவியாளர் மளையாளத்தார் உடன் வர, மஞ்சு எனப்படும் மேகத்துக்குள் புகுந்து உலகம் முழுவதும் காவல் காத்துவருகிறார். அப்போது மேகங்கள் இவருடன் துணையாக அணிவகுத்துச் செல்லும். மஞ்சை அணியாகச் சூடியதால் மஞ்சனீஸ்வரர் எனவும் அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


அய்யனராகப் பிறந்து ஐயப்பன் வளர்ந்தாரா ?


இங்கு அய்யனராகப் பிறந்து கேரளத்து பந்தளராஜா எடுத்து வளர்த்த நிலையில் ஐயப்பன் ஆனதாகவும் மீண்டும் இங்கு வந்து திருமணம் நடந்ததாகவும் வரலாறு உள்ளதால் கார்த்திகை மாதம் முதல் மகர தீபம் வரை சிறப்பான நாட்களாக ஐயப்ப பக்தர்களால் வழிபடப்படுகிறது. சபரிமலை செல்வதன் முன்போ, சென்றுவிட்டு வந்த பின்போ இந்தக் கோயிலுக்கு வருவதைப் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.


கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள குதிரைக் கோயிலில் வேண்டுதல் நிறைவேற குதிரைக் கால்களில் சீட்டுக் கட்டுகிறார்கள். மனக் குழப்பம், களவு, கொள்ளை முதலியவைகளுக்கு குதிரைக் காலில் சீட்டு எழுதிக் கட்டிவிட்டுச் செல்கிறார்கள். அவ்வாறு சீட்டு கட்டினால் நினைத்தது நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


இந்தக்கோயில் பலருக்குக் குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. ஆடி கார்த்திகை, தை, சித்திரை மாதங்களின் திங்கட்கிழமைகள் முக்கியமான நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன.