மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

 

தமிழ் சினிமாவுக்கு இதுபோதாத காலம் என பலரும் நினைக்க தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு பிரச்சினை மேல் பிரச்னை வெடித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரீ-ரிலீஸ் படங்கள் வெளியாகி புதிதாக வெளியாகும் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவிடாமல் செய்கிறது என குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க மறுபுறம் காப்புரிமை பிரச்சினை கொளுந்து விட்டு எரிகிறது. இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

 

தன்னிடம் இரண்டு நிறுவனங்கள் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த போடப்பட்ட ஒப்பந்தம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாடலுக்கு இசையமைப்பாளர் சொந்தம் கொண்டாடுவதை போல பாடலாசிரியர்களும் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என்ற கேள்வியை எழுப்பினர். 

 

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து இளையராஜா பெயர் குறிப்பிடாமல் பாடலுக்கு இசை பெரியதா? வரிகள் பெரியதா? என்பதற்கு பதில் கொடுத்தார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. தொடர்ந்து வைரமுத்துவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளையராஜாவின் சகோதரான கங்கை அமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இளையராஜா பற்றி பேசுவதை வைரமுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும் என காட்டமாக பல விஷயங்களை தெரிவித்தார். 

 

இப்படியான நிலையில் மே தினம் அன்று பாடல் ஒன்றை பகிர்ந்து இந்த பாட்டு இசையமைத்த இளையராஜாவுக்கோ, வரிகள் எழுதிய எனக்கோ, பாடிய ஜேசுதாஸூக்கோ மட்டும் சொந்தமில்லை. இது அத்தனை தொழிலாளர்களுக்கும் சமர்ப்பணம் என தெரிவித்திருந்தார். இது இளையராஜா, கங்கை அமரனுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக பார்க்கப்பட்டது. அதேசமயம் மக்களிடையே இந்த பிரச்சினை பேசுபொருளாக உள்ளது. 

 

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில்,

“குயில்


கூவத் தொடங்கிவிட்டால்

காடு தன் உரையாடலை

நிறுத்திக்கொள்ள வேண்டும்



புயல்

வீசத் தொடங்கிவிட்டால்

ஜன்னல் தன் வாயை

மூடிக்கொள்ள வேண்டும்



வெள்ளம்

படையெடுக்கத் தொடங்கிவிட்டால்

நாணல் நதிக்கரையில்

தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்



மக்கள்

தனக்காகப்

பேசத் தொடங்கிவிட்டால்

கவிஞன் தன் குரலைத்

தணித்துக்கொள்ள வேண்டும்



அதுதான்

நடந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார். மக்கள் பலரும் வைரமுத்து ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருவதாக  கூறப்படுகிறது. பாடல் என்பது இசை, வரிகள் சேர்ந்தது என்றாலும் அது யாருக்கும் தனிப்பட்ட முறையில் சொந்தமாகாது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவானது கங்கை அமரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.