Maha Shivaratri 4 Kala Pooja Timings: சிவபெருமானுக்கு வரும் நாட்களிலே மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுவது மகா சிவராத்திரி ஆகும். இந்த நன்னாளில் சிவ பெருமானை மனம் உருகி வணங்கினால் தீமைகள் நீங்கி ஏராளமான நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.


மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரி வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. சிவராத்திரயை கொண்டாடும் நோக்கத்தில் சிவாலயங்கள் கடந்த சில நாட்களாகவே களை கட்டி வருகிறது.


மகா சிவராத்திரி நான்கு கால பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த நான்கு கால பூஜை என்னவென்றும், அதில் கோயில்களில் எப்படி பூஜைகள் நடக்கிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.


முதல் கால பூஜை:


சிவராத்திரியில் முதல் கால பூஜை நேரம் மாலை 6.25 மணி முதல் இரவு 9.28 மணி வரை ஆகும். முதல் கால பூஜையில் பஞ்ச கவ்ய அபிஷேகம் செய்யப்படும். சந்தன பூச்சு, வில்வம், தாமரை அலங்கார அர்ச்சனை செய்யப்பட்டு, பச்சைப்பயறு பொங்கல் நைவேத்யம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடத்தப்படும்.


இரண்டாம் கால பூஜை:


இரண்டாம் கால பூஜை நேரம் 9.28 மணி முதல் 12.31 வரை ஆகும். பால், தயிர், நெய் கலந்த ரவை அதனுடன் சர்க்கரை கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும். பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்து சிவபெருமானுக்கு சாற்றப்படும். இதன்பின்பு, துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை செய்யப்பட்டு, பாயாசம் நைவேத்யம் செய்யப்படும்.


மூன்றாம் கால பூஜை:


மூன்றாம் கால பூஜையானது நள்ளிரவு 12.31 மணி முதல் அதிகாலை 3.34 வரை ஆகும். தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சாற்றுதல், மல்லிகை பூக்களால் சிவபெருமானுக்கு அலங்காரம் செய்து வில்வ இலைகளால் சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும். எள் பிசைந்து செய்யப்பட்ட சாதம் நைவேத்யம் செய்யப்படும்.


நான்காம் கால பூஜை:


நான்காம் கால பூஜையானது அதிகாலை 3.34 மணி முதல் காலை 6.37 மணி வரை நடைபெற உள்ளது. நான்காம் கால பூஜையில் கருப்பஞ்சாறு அபிஷேகம் சிவபெருமானுக்கு செய்யப்படும். நந்தியா வட்டை மலர் சாற்றப்படும். அல்லி, நீலோற்பலம், நந்தியாவர்த்தம் அலங்காரம் செய்யப்பட்டு ஈசனுக்கு அர்ச்சனை செய்யப்படும். சுத்தான்ன நைவேத்யம் நடைபெறும்.


மகா சிவராத்திரி தினத்தில் சிவாலயங்களில் வழக்கத்தை விட பன்மடங்கு பக்தர்கள் குவிவார்கள் என்பதால் முக்கிய சிவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கபாலீஸ்வரர் கோயில், மருந்தீஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், வேங்கீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க: Maha Shivratri 2024: சிவராத்திரியில் சிவனை வழிபடுங்கள்! பணக்கஷ்டம், மனக்கஷ்டமும் பறந்து போகும்!


மேலும் படிக்க: Maha Shivratri 2024: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்! சிவராத்திரியில் சிவனை தரிசிக்க தெற்கு கைலாயம்!