அன்பார்ந்த ABP Nadu வாசகர்களே,


சிவராத்திரி தினத்தன்று விரதமிருந்தால் என்ன மாதிரியான பலன்களை பெறலாம் என்பதை பற்றி பார்ப்போம். சிவனின் ஐந்தெழுத்து மந்திரமான நமச்சிவாயத்தை உச்சரிப்பவர்கள் பரம்பொருளை அடைவார்கள் என்பது சிவன் வாக்கு. இதேபோல மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய தினம் சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் சிவனை மனம் உருகி பிரார்த்தனை செய்தால் நாம் கேட்டது அனைத்தும் கிடைக்கும், கேட்காததும் கிடைக்கும். குறிப்பாக மாசி மாதத்தில் ஏன் சிவராத்திரியை கொண்டாடுகிறோம்?


சூரியன் சிவனுடைய அம்சமாக பார்க்கப்படுகிறது. சூரியன் கும்ப ராசியில் பிரவேசிக்கும்போது ஒரு விதமான ஒளி அலைகளை நம்முடைய பூமிக்கு அனுப்புகிறார்  நாட்டை ஆளக்கூடிய பல ராஜாக்கள் இந்த மாதத்தில் தான் பிறப்பு எடுக்கிறார்கள். சந்திரனும் சூரியனும் ஒரு சேர கும்ப ராசியில் இருக்கும் சமயமே சிவராத்திரி என்று அழைக்கிறார். அதாவது நம்முடைய முன்னோர்களின் பரிபூரண ஆசிர்வாதம் கிடைக்கும் மாதமாக மாசி மாதம் அமைகிறது சூரியன் பரிபூரண சக்தியோடு விளங்குகிறது.


சிவராத்திரி விரதத்தின் சிறப்புகள்:


சிவராத்திரியன்று ஆறுகால பூஜை செய்ய வேண்டும். குறிப்பாக சிவபெருமானை மனதில் நினைத்து ஒவ்வொரு நொடியும் பக்தியுடன் மனமுருகி பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவராத்திரிக்கு முன் இரவு உணவு மட்டும் அருந்தி விட்டு, சூரியன் உதயமாகும் சமயத்தில் இருந்து எந்த உணவையும் அருந்தாமல் நீர் ஆகாரம் கூட எடுத்துக் கொள்ளாமல் கடுமையான விரதத்தையும் முடிந்தவர்கள் மேற்கொள்ளலாம்.  ஆனால் முடியாதவர்களும் வேலை, வேலைக்கு கால் வயிறு உணவு மட்டும் எடுத்துக் கொண்டு சிவனை மனமுருகி பிரார்த்தனை செய்யலாம்.  


என்னால் மூன்று வேளை விரதம் இருக்க முடியும் என்று கூறுகிறவர்கள், காலையில் பழங்களை சாப்பிட்டுவிட்டு, மதியத்திற்கு காய்கறிகளை மட்டும் எடுத்துக் கொண்டு இரவில் பால் மட்டும் அருந்தி விரதத்தை மேற்கொள்ளலாம். இப்படி செய்யும் பட்சத்தில் நீங்கள் விரதம்  இருந்ததைப் போலவே பலன் தரும். இப்படி கடுமையான விரதம் இருப்பவர்களுக்கும், பக்தியோடு விரதம் இருப்பவர்களுக்கும் சிவன் கேட்ட வரங்களை கொடுப்பார்.


பணம் இல்லை வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லை என்று கவலையோடு வாழ்ந்திருக்கும் உங்களுக்கு சிவராத்திரி விரதம் ஒரு ஜாக்பாட். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கலாம் அல்லது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கலாம் எந்த சிக்கல் ஆயினும் சிவராத்திரி விரதம் உங்களுக்கு சிறப்பை கொண்டு வரும். கோடிகளில் உங்களை புரள வைக்கும். வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் அனுபவிக்கக்கூடிய சக்தி கிடைக்கும். நோய் நொடியோடு இருப்பவர்கள் நோய் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள்.


வரங்களை அருளும் சிவராத்திரி:


எனக்கு பணத் தேவை இல்லை....? கஷ்டங்களும் இல்லை, இப்பிறவி போதும் சிவனின் பாதத்தில் சேர வேண்டும். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று பலர் மனதில் நினைத்திருக்கலாம். இதற்கு சிவராத்திரி அன்று தூங்காமல் சிவனுடைய பதிகங்களை மட்டும் பாடி அவரை மலர்களால் அர்ச்சனை செய்து பக்தியுடன் வணங்கிவர மறுபிறவி என்பது உங்களுக்கு இல்லாமல் செய்வார் நம் சிவபெருமான்.


ஒரு மனிதனுக்கு பணம் மட்டும் தேவையில்லை என்பதை உணர்த்துவதற்காக தான் எளிய கோலத்தில் புலித்தோலை போர்த்திக் கொண்டு, பூதகணங்கள் உடன் ஆடம்பரமே இல்லாமல் சிவன் நமக்கெல்லாம் காட்சி  அளிக்கிறார்.  மாட மாளிகையில் இல்லாத சிவபெருமான் சதா தியானத்தில் ஈடுபடுவதை நாம் புராண கதைகள் மூலம் அறிய முடியும். இப்படியான சூழலில் தான் சிவராத்திரி அன்று முழு தியானத்தில் ஈடுபடுவோருக்கு கேட்ட வரங்களை அள்ளித் தருவது மட்டுமல்லாமல் முற்பிறவி பாவங்களையும் சேர்த்து அழிக்க வல்லவர். மறுபிறவியில் சிவனின் பாதங்களை சென்றடைய சிவராத்திரி ஒரு சிறந்த வழி என்று நம்பப்படுகின்றது.