விழுப்புரத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு 40 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மகா சிவராத்திரி


விழுப்புரம் திரு.வி.க., வீதியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 40,000 லட்டுகள் தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் திரு.வி.க வீதியில் ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோயிலின் மூலவராக கைலாசநாதர் உள்ளார்.




லட்டு பிரசாதம் 


வருகின்ற 8-ம் தேதி  மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இக்கோயிலின் பிரதோஷ பேரவை சார்பில், பிரதோஷ பேரவை உறுப்பினர்களிடம் இருந்தே பணம் வசூல் செய்து, சிவராத்திரி அன்று சுவாமி தரிசனம் செய்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டுகளை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் லட்டுக்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. லட்டுக்களை தயாரிக்கும் பணியில் பேரவையின் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு லட்டுகளை பிடித்து பெட்டிகளில் போட்டு வைக்கிறார்கள். மொத்தமாக 40 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


1008 சங்கு பூஜை


அதுமட்டுமல்லாமல் மார்ச் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரி திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ள நிலையில், காலை 11 மணிக்கு 1008 சங்கு பூஜைகள் நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.