தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாமந்தான் குளத்தை மேல்கரையில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாதசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி நடக்கிறது.
சோழவளநாட்டின் தலைநகரமாம், பெருவுடையார் எழுந்தருளியிருக்கும் பெரியகோவிலையும், புகழ்வாய்ந்த மாமன்னர்கள் ஆண்ட அரண்மனையும் தன்னகத்தே கொண்டு அழகாபுரி என்ற பெயருக்கேற்ப நீர்வளமும், நிலவளமும் மக்களிடையே மனவளமும், ஒருங்கே ஓங்கி திகழும் செந்தமிழ் நாட்டின் மகுடம்போல் விளங்கும் தஞ்சையம்பதியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சாமந்தான்குளம். கி.பி., 14ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் ஒருவரது தளபதியான சாமந்தநாராயணன் என்பவர் தஞ்சையில் கீழை நரசிம்ம பெருமாள் கோவில் கட்டினார். அக்கோவிலுக்கு குளம் ஒன்று தேவை எனக்கருதி இக்குளத்தை வெட்டினார்.
அப்பகுதியை சாமந்த நாராயண சதுர்வேதிமங்களம் என பெயரிட்டு ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கினார். காலப்போக்கில் அக்குளம் சாமந்தான்குளம் என்றானது. இக்குளம் நகரின் மையத்தில் உள்ளதால் இந்நகரின் நிலத்தடி நீராதாரத்துக்கு முக்கிய காரணமாக விளங்கி வந்தது. இந்த குளத்தின் மேல்கரையில் மிகவும் பழமைவாய்ந்த அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாத சுவாமி, விநாயகர், சுப்ரமணியர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலுக்கு திருப்பணிகள் நிறைவேற்றி கும்பாபிஷேகம் செய்வதென்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு அனுமதியுடன், அறநிலையத்துறை உத்தரவின் படி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. இதையடுத்து இக்கோயிலில் திருப்பணிகள் மும்முரமாக நடந்தது வந்தது.
தற்போது கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து புதிய பொலிவுடன் கோயில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி காலை இக்கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. வரும் 12ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. அதிகாலை 5 மணி முதல் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லெக்ஷ்மி ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், சிறப்பு வழிபாடு, சிறப்பு பூஜைகள் ஆகியவை நடக்கிறது.
வரும் 14ம் தேதி காலை யாகசாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நிறைவடைந்து கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்து மூலஸ்தான விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான விக்ரஹங்களுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடக்கிறது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகப்பொறுப்பாளர்கள் தலைவர் ரமேஷ், செயலாளர் பகவக்த் ராவ், பொருளாளர் ராஜகுமார் மற்றும் தஞ்சை மாநகராட்சி 25 வார்டு உறுப்பினர் தெட்சிணா மூர்த்தி மற்றும் பலர் செய்துள்ளனர்.