தமிழகம் முழுவதும் சித்ரா பௌர்ணமி தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சித்ரா பௌர்ணமியை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் திருவிழாக்கள் நடைபெற்றது.
அசிங்காடு முத்துமாரியம்மன் ஆலய 109 -ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழாவில், காவடி உற்சவம்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அசிக்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்ரா பௌர்ணமி முன்னிட்டு 109 -ஆம் ஆண்டு காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து பால் காவடி, பால்குடங்கள், பன்னீர் காவடி, வேப்பிலை காவடி, ரதக்காவடி ஆகியவற்றை நூற்றுக்கணக்கான பக்தர்கள் எடுத்து வந்தனர்.
ஊரில் உள்ள வீதிகள் வழியே காவடி ஊர்வலம் நடைபெற்ற பொழுது வீடுகள் தோறும் விளக்கேற்றி வைத்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஆலயத்தை காவடி ஊர்வலம் வந்தடைந்தபோது ஏராளமான பக்தர்கள் சாமி அருள் வந்து ஆடிய காட்சி காண்பவர்களை பக்தி பரவசமடையச் செய்தது. தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பால் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
உக்கடை சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உக்கடை அருகில் பழமை வாய்ந்த சீதளாதேவி மகாமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. சக்தி கரகம் ஊர் எல்லையில் இருந்து புறப்பட்டு கிராம வீதிகளில் மேளதாள வாத்தியங்கள் முழங்க வீதி உலாவாக வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு உகந்த மஞ்சள் உடை உடுத்தி வீதி உலாவாக ஆலயம் வந்தடைந்தனர்.
அங்கே திடலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்க தொடர்ந்து பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் அழகு காவடி குத்தி வந்த பக்தர் ஒருவர் சிறுவனை தூக்கிக்கொண்டு தீமிதித்தது பக்தர்களை பக்தி பரவசப்படுத்தியது. தொடர்ந்து சக்தி கரகம் ஆலயம் வந்தடைந்து கோயிலில் இறக்கி வைக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
சோழன்பேட்டை மகா மாரியம்மன் ஆலய சித்ரா பௌர்ணமி உற்சவம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடங்கள் அல்கு காவடிகள் எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
காவிரி ஆற்றங்கரையில் இருந்து துவங்கிய பால்குடம் மற்றும் காவடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்து அடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகாதீபாரதனை செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற மாவிளக்கு மாவு ஏற்றி வழிபாடு செய்தனர். 12 அடி நீளம் உள்ள அலகை குத்தியபடி கூர்மையான ஆணிகளால் செய்யப்பட்ட முள் செருப்பை மாட்டிக் கொண்டு பக்தர்கள் நடனம் ஆடியபடியே வந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
வழுவூர் பாலமுருகன் ஆலயத்தில் 39-ம் ஆண்டு சித்ராபௌர்ணமி விழா.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வழுவூர் வலையாம்பட்டினத்தில் பாலமுருகன் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு 39 -ம் ஆண்டு பால்குட திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. வழுவூர் கீழவீதியில் இருந்து அலகு காவடி, பால்குடங்கள் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தன.
விழாவில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முதுகில் அழகு குத்தி பெரிய தேரை இழுத்தும், டாடா ஏசி வாகனத்தில் முருகனை வைத்து கயிறு கட்டி முதுகில் அலகுகுத்தி அலகு காவடியுடன் கோயிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். மேலும் பல பக்தர்கள் கல் உருளையை முதுகில் கட்டி இழுத்துக் கொண்டும் சென்றனர். மங்கள வாத்தியங்கள் செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவாக பாலபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.
சேந்தங்குடி ஸ்ரீ அக்னிஸ்வரி காளியம்மன் கோயிலில் 37 -ஆம் ஆண்டு பால்குட விழா.
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி ஸ்ரீ அக்னிஸ்வரி காளியம்மன் கோவிலில் 37 -ஆம் ஆண்டு பால்குட விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி விழா தொடங்கி தினந்தோறும் சுவாமி விதி உலா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று காவிரி துலா கட்டத்தில் காப்பு கட்டுதல் தொடங்கி விரதம் இருந்த 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி பால்குடம் எடுத்து மேளதாள வாக்கியங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக பால்குட பக்தர்கள் ஊர்வலமாக கோயிலை சென்றடைந்தனர். அதனை தொடர்ந்து சுவாமிக்கு பாலபிஷேகம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.