உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற அகரத்து முத்தாலம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தும் முளைப்பாரி எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றினர்.

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற அகரத்து முத்தாலம்மன் திருக்கோவில். இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் விழா எடுத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

 





 



 

இந்நிலையில் இந்த ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழா நேற்றும், இன்றும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று நூற்றுக்கணக்கான பெண்கள் அகரத்து முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கோயிலில் வைத்து வழிபாடு செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.





 

இதுகுறித்து பொங்கல் வைத்த பெண்கள் நம்மிடம் கூறுகையில், “உசிலம்பட்டி பகுதியில்  அகரத்து முத்தாலம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நினைத்தது விரைவில் நடக்கும். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அகரத்து முத்தாலம்மனுக்கு புரட்டாசி பொங்கல் வைத்து வழிபடுவோம். இரவில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்துவந்து கும்மிகொட்டுவோம். இதற்கு சில வாரங்கள் விரதம் இருந்து முளைப்பாரி பயிரிட்டு வேண்டிக் கொள்வோம். முளைப்பாரியைப் போல நமது குடும்பமும் செழிப்பாக இருக்கும் என்பதும் நம்பிக்கை. நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டு விவசாயம் நல்லபடியாக நடைபெறும். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக எங்கள் குடும்பத்தினர் வீடு கட்ட வேண்டும் என நினைத்து புராட்டாசி பொங்கல் வைத்தோம்.



 

தற்போது எங்களின் குடும்பத்தின் ஆசைப்படி வீடு கட்ட ஆரம்பித்து பணிகள் நிறைவடைய உள்ளது. அந்த மகிழ்ச்சியுடன் இந்தாண்டு பொங்கல் வைத்து முளைப்பாரியும் எடுத்துள்ளோம். இது போல பெண்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படி வேண்டுதலை நிறைவேற்ற அகரத்து முத்தாலம்மன் திருக்கோயிலில் வழிபடுவார்கள். அதன்படி தங்களது வேண்டுதல் நிறைவேறினால் பொங்கல் வைத்து முளைப்பாரியும் எடுப்பார்கள். அகரத்து முத்தாலம்மன் திருக்கோயிலில் வேண்டுதல் நிறைவேறும் என்பது எங்கள் பகுதியின் மிகப்பெரும் நம்பிக்கையாக உள்ளது” என தெரிவித்தனர்.