உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்து செல்கிறார்கள். இந்நிலையில்  மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி இரவு சுமார் 10:30க்கு தீ விபத்து ஏற்பட்டது. வீர வசந்தராயர் மண்டபத்தில் தூண்கள் சேதமடைந்தது.

 





கோயிலில் உள்ள  சுமார் 36 கடைகளும் தீ பற்றி எரிந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பார்வையிட்டு சென்றனர். சுமார் 20 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து பணிகளை வேகப்படுத்தியது.

 



 


நாமக்கல்லில் இருந்து கற்தூண்களை மதுரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து கனரக வாகனங்களில் கற்கள் ஏற்றப்பட்டு,  மதுரை அவனியாபுரம் அருகே உள்ள செங்குளத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்குச் சொந்தமான தோட்டத்தில் கற்கள் வைக்கப்பட்டு தூண்கள் செதுக்கும்  பணிகள் கடந்த 2021-ல் தொடங்கியது.



 

அதன்படி அங்கு கற்கள் வெட்டி எடுக்க ரூ.6.40 கோடி, மண்டப வடிவமைப்புக்கு ரூ.11.70 கோடி நிதி அரசு ஒதுக்கீடு செய்தது.  அந்த கற்களை தூண்களாக செதுக்கும் பணியை மேற்கொள்ள திருப்பூர் ஸ்பதி வேல்முருகன் என்பவருக்கு உரிமம் அரசு வழங்கியது. இந்த நிலையில் தீ விபத்து நடந்து 6-ம் ஆண்டுக்கு பிறகு கோயில் வளாகம் சிறப்பு பூமி பூஜை உடன்  புனரமைப்பு பணி இன்று துவங்கியது. மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் கோயில் அதிகாரிகள் பங்கேற்றனர். இன்று துவங்கும் இந்த பணியானது மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும் எனவும் அதற்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் என தகவல் தெரிவித்தனர்.