மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு எதிரே மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற துவக்க விழா மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிமன்றத்தை காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன், மதுரை மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி வடமலை கலந்து கொண்டனர். மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், சுரேஷ் குமார் உள்ளிட்ட நீதிபதிகள் பஙகேற்கின்றனர். தமிழக சட்டத்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றனர்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ பேச்சு, "பாலியல், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது மனத்திற்கு மிகப் பெரிய வலியை தருகிறது. பொது மக்கள் காவலர்களை பார்த்தால் அச்சப்படு விதமாக இருக்கக் கூடாது, பாதுகாப்பாக உணரவேண்டும், அதேபோல் பொது மக்கள் நீதிமன்றத்தை எளிதில் அணுகும்படி இருக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு முறையும் வழக்கில் பங்கேற்க 100கி.மீ மேல் பயணம் செய்ய வேண்டி உள்ளது. அது போன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். மதுரையின் வரலாற்று சிறப்புகளை பார்வையிட 1 நாள் போதாது 1 மாதம் தேவையென நினைக்கிறேன். விரைவில் மீண்டும் மதுரைக்கு வருவேன். தென்னிந்திய உணவுகள் மிகவும் பிடிக்கும். இன்று காலை மிகவும் சுவையான தோசை உண்டேன். 12 வயதில் உண்ட நிலையில் இன்று மீண்டும் உண்ண வாய்ப்பு கிடைத்தது. நிச்சயம் எனது டைரியில், தோசை காலை உணவுக்கு ஏற்றது என குறித்துவைப்பேன்" என்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “106 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு இதுவரை நீதித்துறை சார்ந்த பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 44 புதிய நீதிமன்றம் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் சமூக நீதியுடன் நீதிபதி நியமம் செய்ய வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற கிளைகளை சென்னையில் அமைக்க வேண்டும் என மூன்று கோரிக்கைகளை மத்திய அமைச்சகத்திற்கு இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “பல மாநிலங்களில் காற்றோட்டமே இல்லாத அறைகளில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பணியாற்றும் நிலை உள்ளது. பெண்களுக்கான நாப்கின் இயந்திர வசதிகள் இல்லை. தமிழகம் நீதித்துறை கட்டிடங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை முனைப்புடன் மேம்படுத்தி வருகிறது.பல மாநிலங்களில் காற்றோட்டமே இல்லாத அறைகளில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பணியாற்றும் நிலை உள்ளது. பெண்களுக்கான நாப்கின் இயந்திர வசதிகள் இல்லை. உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த நாட்டிற்குமானது. இணையவழி மூலமாக நீதிபதி டெல்லியில் இருக்க வழக்கறிஞர்கள் மேலூரிலோ, விருதுநகரிலோ இருந்து வாதிடலாம். நீதிமன்ற செயல்பாடுகளை நேரலை செய்வதன் மூலமாக சட்டக் கல்லூரி மாணவர்களும் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்