கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.






 

உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி இருக்க வேண்டும்.  ஆனால் கோயிலில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் சுவாமி சன்னதி வீரவசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்தது.



 

அந்த மண்டபத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. சீரமைப்பு பணிகளை முடிந்தவுடன் கும்பாபிஷேக பணிகளை தொடங்க வேண்டும் இதன் காரணமாக ரூபாய் 25 கோடி மதிப்பில் மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் புனரமைக்கப்பட்டு பின்னர் 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.



 

அதன்படி மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள்  மேற்கொள்ள ஏதுவாக இன்று பாலாலய பூஜை நடைபெற்றது.  இதற்காக சுவாமி சன்னதி, 2ஆம் பிரகாரம், நவக்கிரக சன்னதி அருகில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு  நேற்று காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தியுடன் பூஜையும் நேற்று மாலை முதல் இரவு  வரையிலும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.   இதனைத்தொடர்ந்து இன்று காலை காலை 7 மணி முதல் 9 மணி வரையில் 2ஆம் கால பூஜைகள் நடைபெற்று நவகிரக சன்னதி அருகே 5 கோபுரங்களுக்காக  5 யாக குண்டம் அமைக்கப்பட்டு 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து புனித நீர் கலசங்கள் 2-ஆம் பிரகாரம் வலம் வந்து உற்சவர் சாமி சன்னதியில் கோலால பூஜைகள் நடைபெற்று பின்னர் அங்கு மாம்பலகையில் கோபுரங்களை வரைந்து வைத்து அதற்கு பூஜை செய்து புனித நீர் ஊற்றி பாலாலயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.  பாலாலயம் நடைபெற்றதை தொடர்ந்து கோயில் கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்துவித மராமத்து பணிகள் தொடங்கவுள்ளது.