மதுரை மாவட்டம் அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பிரம்மோற்சவ பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி திருவிழாவை காண பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி கட்டி வருவது சிறப்பாக இருக்கும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோயிலில், ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கள்ளழகர் என்று அழைக்கக்கூடிய சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

 





இதனைத்தொடர்ந்து திருக்கோவில் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் "கோவிந்தா, நமோ நாராயணா" என்ற பக்தி கோஷத்துடன் ஆடிப் பெருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி கிட்டதட்ட 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுவாமி தினசரி காலை தங்கப்பல்லக்கிலும், இரவு தங்க, கருட, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்திலும் எழுந்தருளுவார். ஆடித் திருவிழாவிற்கு பலரும் கள்ளழகரின் காவலாக விளங்கும்  பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு அரிவாள் காணிக்கை செய்வார்கள். இந்நிலையில் சிங்கம்புணரியில் இருந்து பிரமாண்ட அரிவாள் செய்து அனுப்பப்பட்டுள்ளது.

 




சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இரும்பு தளவாடங்கள் செய்யும் தொழிற்பட்டறைகள் செயல்பட்டு வரும் நிலையில் இங்கு மதுரை மாவட்டம் அழகர்கோyiல் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு நேர்த்தி கடன் செலுத்துவதற்காக 450 கிலோ எடை கொண்ட  18.5 அடி உயரம் உள்ள அரிவாள் செய்யும் பணி கொடுக்கப்பட்டது.
இதற்காக  தொழிலாளர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து பயபக்தியுடன் 15 நாட்களாக பணி செய்து  பிரமாண்ட அரிவாளை தயார் செய்து முடித்தனர். அந்த அரிவாள்  பக்தர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.