Kandha Sasti November 2023: தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி ஆகும். மாதந்தோறும் சஷ்டி தினம் வந்தாலும் ஐப்பசி மாதம் வரும் சஷ்டி மிக மிக  உகந்த நாட்களில் ஒன்றாகும். ஐப்பசி மாத சஷ்டியில்தான் முருகப்பெருமானின் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடக்கிறது. நடப்பாண்டிற்கான கந்த சஷ்டியில் தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13-ந் தேதி தொடங்குகிறது.


கந்த சஷ்டி எப்போது? எந்தெந்த தினத்தில் என்னென்ன விசேஷம்?


ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை தினத்தில் கந்த சஷ்டி தொடங்குகிறது.


நவம்பர் 13 ( திங்கட்கிழமை) – கந்த சஷ்டி விழா தொடக்கம்


நவம்பர் 14 ( செவ்வாய்)          - முருகப்பெருமான் வேல் வாங்குதல்


நவம்பர்  15 ( புதன்)                  - சூரபத்மனுக்கு தூது விடுதல்


நவம்பர் 16 (வியாழன் )           - சூர்பத்மனுடான போர் தொடங்குதல்


நவம்பர்  18 ( சனி)                     -  சூரசம்ஹாரம்


நவம்பர் 19 ( ஞாயிறு)               - திருக்கல்யாணம்


சஷ்டி விரதம் (Kandha Sashti Viratham):


முருகப்பெருமானுக்காக கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான கந்த சஷ்டி முருகனின் அறுபடை வீடுகள் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பலரும் விரதம் இருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.


கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும் 6 நாட்கள் சிலர் பால், பழம் மட்டும் அருந்தி விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். சிலர் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார தினத்தில் மட்டும் விரதம் இருப்பார்கள். ( விரதம் இருப்பது பக்தர்கள் தங்களது உடல்நலத்தை பொறுத்து இருப்பதே நல்லது ஆகும்)


சஷ்டி விரதம் இருப்பவர்கள் காப்பு கட்டியோ, காப்பு கட்டாமலோ தொடங்கலாம். தீபாவளிக்கு மறுநாள் வரும் அமாவாசை தினத்தில் சஷ்டி தொடங்குவதால், அன்றைய தினம் முதல் பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கலாம்.


விரதம் இருப்பது எப்படி? (Kandha Sashti Viratham Procedure in Tamil)


கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் சஷ்டி தொடங்கும் வரும் 13-ந் தேதி காலையிலே எழுந்து நீராட வேண்டும். பின்னர், வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தையும் மற்ற தெய்வங்களையும் வழிபட வேண்டும். பின்னர், முருகப்பெருமான் படத்திற்கு தீப ஆராதனை காட்டி, முருகனை வணங்கி தங்கள் விரதத்தை தொடங்கலாம். கந்த சஷ்டி விரதத்தை நாம் தொடங்குவது வீட்டில் இருந்தபடியோ அல்லது கோயிலுக்கு சென்றோ தொடங்கலாம். விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது விரதத்தை சூரசம்ஹாரம் நிறைவடையும் அந்த மாலை வேளையில் நிறைவு செய்யலாம்.


பலன்கள் என்ன? (Kanda Sashti Viratham Benefits)


கந்த சஷ்டி விரதத்தின்போது முருகப்பெருமானின் கந்த சஷ்டியை படிப்பது, முருகப்பெருமானின் திருமந்திரங்களை பாராயணம் செய்வது போன்றவற்றுடன் விரதம் இருப்பதால் வாழ்வில் கண்டு வரும் துன்பங்களில் நீங்கி இன்பம் அடையலாம். குறிப்பாக, குழந்தைப் பேறு இல்லாதவர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். இதுமட்டுமின்றி வீட்டில் செல்வங்களும், மகிழ்ச்சியும் பெருகும் என்பது நம்பிக்கை ஆகும்.


மேலும் படிக்க: Diwali 2023: இது தெரியுமா உங்களுக்கு? தீபாவளி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது? புராணங்கள் சொல்வது இதுதான்..


மேலும் படிக்க: Sani Vakra Nivarthi Palangal: கன்னிக்கு சூப்பர்! கடகம், சிம்மம் ராசிக்கு எப்படி தெரியுமா? சனி வக்கிர நிவர்த்தி பலன்கள் இதோ!