மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் பிரம்மனின் அகந்தையை அழித்தவரும், ஜலந்தாசுரனை சம்ஹரித்தவரும், காலத்தை நிர்ணயிப்பவராகவும், கால பயத்தை போக்குவராகவும், ஏனைய தீய சக்தியிலிருந்து பக்தர்களை காப்பவராகவும் பல்வேறு சிறப்புகளை கொண்ட மிக பழமை வாய்ந்த ஸ்ரீ காலபைரவர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் மிகவும் சிதலமடைந்து காணப்பட்டதால் கிராம மக்கள் அதனை புதுப்பித்து குடமுழுக்கு விழா நடத்திட முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து ஊர்மக்களின் சீரிய முயற்சியால் இக்கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததும், பணிகள் முடிவுற்றதை அடுத்து கும்பாபிஷேக விழாவிற்கு நாள் குறிக்கப்பட்டு, குடமுழுக்கு தினமான இன்று ஸ்ரீ காலபைரவர், விநாயகர், வீரன் ஆகிய சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை நவகிரக ஹோமங்களுடன் முதல் கால யாகசால பூஜை தொடங்கியது. அதனை தொடர்ந்து யாக குண்டத்தில் புனித நீர் அடங்கிய கடங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, பூர்ணாகுதி செய்யப்பட்டு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களை மேள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.
அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, வான வேடிக்கையுடன் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற சீர்காழி சட்டை நாதர் கோயில் குடமுழுக்கு - உள்ளூர் விடுமுறை அறிவிக்க கோரிக்கை
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்