தமிழ் சினிமாவிற்கு இந்த வாரம் ஆரவாரமான வாரம் என்றே கூறலாம். ஏனென்றால் துணிவு மற்றும் வாரிசு படத்திற்கு பிறகு தமிழ் சினிமா திரையுலகில் பெரிய படங்களின் வெளியீடு இந்த வாரம் உள்ளது. தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி பிற மொழி படங்களுக்கும் தமிழில் நல்ல வரவேற்பு இருப்பதால் தற்போது அந்த படங்களுக்கும் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.


இந்த சூழலில், வரும் 30-ந் தேதி அதாவது வரும் வியாழக்கிழமை பத்து தல, தசரா, போலா படங்கள் வெளியாகிறது. மேலும், 31-ந் தேதி வரும் வெள்ளிக்கிழமையன்று விடுதலை படம் வெளியாகிறது. தசராவும், போலாவும் பிற மொழி படங்களாக இருந்தாலும் இந்த நான்கு படங்களுக்குமே தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதே உண்மை.


பத்து தல:


தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக உலா வருபவர் சிம்பு. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க பத்து தல படம் உருவாகியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவர்களுடன் பிரியாபவானி சங்கர், கலையரசன் நடித்துள்ளனர்.


விடுதலை:


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். யதார்த்தமான மனதிற்கு நெருக்கமான படங்களை இயக்குவதில் கில்லாடியான இவரது இயக்கத்தில் துணைவன் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் விடுதலை. முதன்முறையாக சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 31-ந் தேதி வெளியாகிறது. 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்த படம் விசாரணை, அசுரன் போன்று மிகவும் அழுத்தமான திரைப்படமாக அமையும் என்று படத்தின் ட்ரெயிலர் உணர்த்துகிறது. இதனால், விடுதலை படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


தசரா:


தெலுங்கின் பிரபல ஹீரோ நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படம் வரும் 30-ந் தேதி வெளியாகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடத்திலும் இந்த படம் வெளியாகிறது.


போலா:


பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் அஜய்தேவ்கன். தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் கைதி. இந்த படத்தின் இந்தி ரீமேக் போலா. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி கதாபாத்திரத்தில் அஜய்தேவ்கனும், நரேன் கதாபாத்திரத்தில் தபுவும் நடித்துள்ளனர். திரைக்கதையில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது படத்தின் ட்ரெயிலரில் தெரிந்தது. மேலும், படத்தின் ட்ரெயிலர் கைதி படத்தை போல இல்லை என்றும் பலரும் தெரிவித்தனர். இந்த சூழலில் போலா இந்தி ரசிகர்களுக்கு இனிக்குமா? இல்லை கசக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


மேலே வெளியாகும் படங்களில் எந்த படம் வெற்றி பெறும் என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிப்பார்கள் ஆகும்.