மங்களூரு ரவி போசவனிக்கே அருகில் உள்ள கடேல் ஸ்ரீ துர்காபரமேஸ்வரி கோயிலில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் 'அக்னி கேளி' எனப்படும் தூத்தேரா' நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்தேரா' அல்லது 'அக்னி கேளி' என்று அழைக்கப்படும் தீ சடங்கு துர்கா தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சடங்கு நடத்தப்படுகிறது. 






துர்காபரமேஸ்வரி கோயில் நந்தினி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில் கடேலில் உள்ள பழமையான ஒன்றாகும். ஆண்டுதோறும் நடைபெறும் ரவி போசவ விழாவின் ஒரு பகுதியாக, ஆத்தூர் மற்றும் கோடேத்தூர் ஆகிய இரு கிராம பஞ்சாயத்து மக்கள், கடவுளை சாந்தப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியினை கடைபிடித்து வருகின்றனர். இந்த திருவிழா சுமார் 8 நாட்கள் நடைபெறும். அதன் முக்கிய பகுதியாக அக்னி கேளி நடத்தப்படுகிறது. 


இந்த அக்னி கேளி என்பது பனை ஓலையை தீயிட்டு எரித்து அதனை எதிர் குழுவினர் மேல் வீசப்படும். அதாவது இரு கிராமத்தை சேர்ந்த மக்கள் நண்பர்களாக இருந்தாலும், உறவினர்களாக இருந்தாலும், இந்த சடங்கின் போது, தீயிட்ட பனை ஓலையை ஒருவருக்கொருவர் மீது வீசுவார்கள். இந்த நிகழ்வு சுமார் 15 நிமிடங்கள் நடைபெறும். அதன் பின்னர் சடங்கு நிறுத்தப்பட்டு இரண்டு கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒன்றாக கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்நிகழ்ச்சியின் போது ஆண் பக்தர்கள் மேலாடை இன்றி கலந்துகொள்வார்கள்.


இந்த அக்னி கேளி என்பது தீய மனசாட்சியைத் தடுக்கவும், அக்னிப்ரியா துர்காபரமேஸ்வரியை மகிழ்விக்கவும் ஒரு அடையாள சைகையாகும். இதுவரை இந்த விழாவில்  யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது. இந்த வழிபாட்டில் கலந்துகொள்ள தொலைதூர கிராமங்களில் இருந்து மக்கள் வருகை தருவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, கிராம மக்கள் அம்மனுக்கு ஊர்வலம் எடுத்து, ஒரு குளத்தில் நீராடுவார்கள். அதன் பின் இந்நிகழ்வு நடைபெறும்.