பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் திருவிழாக்களின் திருவிழாவான சித்திரைப்பெருவிழா ஏப்ரல் 12 அன்று மீனாட்சி அம்மன் கோயிலின் கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்றது.
சித்திரை விழாவின் முற்பகுதியில் 12 நாட்கள் நடைபெறும் மீனாட்சி அம்மன் கோவில் நிகழ்வுகளின் மைய விழாவான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. மதுரையின் அரசி மீனாட்சிக்கும் அவளது நாயகன் சுந்தரேசுவரருக்கும் இன்று காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் மதுரையின் அரசியாக முடி சூடிய மீனாட்சி, நேற்று திக்கு விஜயம் செய்தார். அதனை தொடர்ந்து இன்று திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெறுகிறது.
கோயிலின் உள்ளே வடக்கு ஆடி - மேல ஆடி வீதி சந்திப்பில் உள்ள கல்யாண மேடை வெட்டிவேர்கள் மற்றும் வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருக்கல்யாண மேடையில் பவளக்கனிவாய் பெருமாளும், சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும் மணமேடையில் எழுந்தருள்வர். தொடர்ந்து மீனாட்சியம்மனும் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் மணக்கோலத்தில் மேடையில் எழுந்தருளவுள்ளனர்.
8:35 மணிக்கு மீனாட்சியம்மன் சார்பிலும், சுந்தரேசுவரர் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்து சிவாச்சாரியார்கள் மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். இதனையடுத்து சுவாமிக்கும் அம்மனுக்கும் பட்டு சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்று வேதமந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் முழங்க மங்கலநாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
சுவாமிக்கு மாங்கல்யம் அணிவிக்கும் அதே கணத்தில் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்களும் தங்களது மாங்கல்யத்தை புதுப்பித்துகொண்டனர்.
திருக்கல்யாணத்தில் பங்கேற்க 1 லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மெகா விருந்து நடைபெறுகிறது. இந்த விருந்தின்போது சாப்பிட்ட கையோடு பக்தர்கள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக்கொள்வார்கள்.
விழாவை கட்டணம் இல்லாமல் தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோர் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
ரூ.500 கட்டணச் சீட்டு வைத்திருப்போர் வடக்கு கோபுரம் அருகேயுள்ள முனீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியிலும், ரூ.200 கட்டணச்சீட்டு வைத்திருப்போர் வடக்கு சித்திரை வீதி வழி வந்து வடக்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருக்கல்யாண விழாவை முன்னிட்டு 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களும் மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.