தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. குறிப்பாக, ஆடி மாதத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு. ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாதம் இன்று பிறந்துள்ளது. ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் எல்லாம் களைகட்டி காணப்படுகிறது.
பிறந்தது ஆடி:
கடந்த ஒருவார காலமாகவே ஆடி மாத பிறப்பிற்காக களைகட்டி காணப்பட்ட கோயில்களில், இன்று ஆடி மாதம் என்பதால் கோலாகலமாக காணப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களின் தனிச்சிறப்பாக கருதப்படும். ஆடி மாதத்தில் சக்திக்குள் சிவம் அடங்கும் என்று புராணங்களில் கூறப்படுவதால், இந்த மாதம் அம்மனுக்கு மிக மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஆலயங்களில் காலை முதல் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மேல்மருவத்தூர் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உள்பட அனைத்து அம்மன் கோயில்களிலும் காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
களைகட்டும் கோயில்கள்:
பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும் முக்கியமான கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களுக்கும், வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை நாட்கள் இன்னும் சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் தமிழகத்தை காட்டிலும் வட தமிழகத்தில் ஆடி மாதம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பாக காணப்படும். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி சனிக்கிழமை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதும், அன்னதானம் வழங்குவதும் காணப்படும்.
பக்தர்கள் பரவசம்:
குறிப்பாக, ஆடி மாதம் என்றாலே கோயில்களில் கூழ் ஊற்றுவது தனிச்சிறப்பாக காணப்படும். இன்று முதல் இந்த மாதத்தின் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த நாட்களிலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் பலரும் மாலை அணிந்து கோயில்களுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Aadi Month 2024: மக்களே.. ஆடி மாதம் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..?
மேலும் படிக்க: 200 ஆண்டுகள் பழமையான மயிலாடுதுறை தோப்பு தெரு திரிசூலி காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா...!