Aadi Month Do's and Don'ts: தமிழ் மாதங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி மாதம்(Aadi Month) உள்ளது. ஆன்மீகத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதம் நாளை பிறக்கிறது. ஆடி மாதம் பிறந்து விட்டாலே கோயில்களில் விழாக்கோலம் காணப்படும். குறிப்பாக, அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுதல், சிறப்பு வழிபாடு என களை கட்டும்.
இந்த நிலையில் ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்று சிலருக்கு குழப்பம் இருக்கும். அதை தீர்க்கும் வகையில் விளக்கமாக கீழே காணலாம்.
என்ன செய்ய வேண்டும்?
- ஆடி மாதத்தில் சுப காரியங்களை செய்யலாமா? என்று கேட்டால் நிச்சயம் செய்யலாம். திருமணத்தை தவிர பிற சுபகாரியங்களை ஆடி மாதத்தில் மேற்கொள்ளலாம்.
- ஆடி மாதத்தில் வீடு, நிலம் சார்ந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்.
- ஆடி மாதம் வாஸ்து புருஷன் நித்திரை விடுவதால் தாராளமாக ஆடி மாதத்தில் கிரஹப்பிரவேசம், வேறு வீடு குடியேறுதல், புதிய நிலம் மற்றும் வீடு வாங்குதல் போன்ற விஷயங்களை செய்யலாம்.
- ஜோதிடத்தில் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில்தான் வாஸ்து பூஜை, வீடு கிரஹப்பிரவேசம் ஆகிய சுப நிகழ்ச்சிகளை செய்யக்கூடாது. ஆனாலும் பெரும்பாலோனார் ஆடி மாதங்களில் புதுமனை புகுவிழா செய்வதை தவிர்த்து விடுகின்றனர்.
- ஆடி மாதத்தில் புதியதாக வீடு வாங்கவோ அல்லது நிலம் வாங்கவோ முன்பணம் அளிக்கலாம்.
- ஆடி பதினெட்டாம் நாளில் நிலம் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் தாராளமாக செய்யலாம்.
- ஆடிப்பெருக்கு நன்னாளில் தாலி பிரித்துக் கோர்த்து போடுவது வழக்கம். அதை செய்யலாம்.
- ஆடி மாதத்தைப் பொறுத்தவரை கோயில்களில் நேர்த்திக்கடன், வழிபாடு ஆகியவற்றை பக்தர்கள் செய்யலாம்.
- ஆடிப்பெருக்கு நன்னாளில் புது வீடு வாங்க அல்லது நிலம் வாங்க முன்பணம் கொடுக்கலாம்.
என்ன செய்யக்கூடாது?
- ஆடி மாதத்தில் திருமண நிகழ்ச்சிகளை தவிர்ப்பது மிகவும் நல்லது ஆகும். ஆடி மாதத்தில் திருமணம் நடத்தக்கூடாது என்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளது.
- ஆடி மாதம் திருமணம் செய்தால் தம்பதிகளுக்கு வெயில் அதிகமாக இருக்கும் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பதால் ஆடி மாத திருமணத்தை தவிர்த்தனர்.
- மேலும், விவசாயிகளிடம் ஆடி மாதத்தில் தங்களிடம் இருந்த பணத்தை விவசாயத்திற்கு செலவு செய்திருப்பார்கள் என்பதால் அவர்களிடம் போதிய அளவு பணம் இருக்காது என்பதாலும் ஆடி மாதம் திருமணத்தை தவிர்க்க வேண்டிய சூழல் உருவானது.
- ஆடி மாதம் எவ்வாறு திருமணம் செய்யக்கூடாதோ அதேபோல ஆடி மாதத்தில் அரைகுறையாக கட்டி உள்ள வீட்டிற்கு புதியதாக குடியேறவோ, கிரகப்பிரவேசம் செய்யவோ கூடாது.
- ஆடி மாதத்தில் இரு மனங்கள் இணையும் திருமணம் மட்டுமின்றி நிச்சயதார்த்தமும் நடத்தக்கூடாது.
- ஆடி மாதத்தைப் பொறுத்தவரை இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆடி மாதத்தில் புது வீடு குடிபுகுதல், கிரகப்பிரவேசம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது ஆகும்.
- ஆடி மாதத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது.
- ஆடி மாதத்தில் திருமணத்திற்கு பெண் பார்க்கச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- ஆடி மாதம் குழந்தைகளுக்கு முதன்முறையாக மொட்டை அடிக்கக்கூடாது.
இதுதவிர, ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம். அம்மன் ஆலயம் உள்பட பல கோயில்களுக்கு நேரில் சென்று வழிபடுவது மிகுந்த பலனை அளிக்கும்.