மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் மற்றும் காவிரி சங்கமிக்கும் பூம்புகார் உள்ளிட்ட புண்ணிய நீர்நிலைகளில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்காக திதி கொடுத்து பலிகர்ம பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெறலாம் என்பது ஐதீகம். அந்தவகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு புண்ணியஸ்தலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம்.
ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசையின் சிறப்பு
ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பூம்புகாரில் வழிபாடு
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் மற்றும் பிரசித்திபெற்ற காவிரி துலா கட்டத்திலும் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கும், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலும் படை எடுத்து வழிபாடு செய்வார்கள்.
காவிரி துலாக்கட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகின்றது. காசிக்கு நிகராக மயிலாடுதுறை காவிரி துலாகட்டம் திகழ்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக வரலாறு. இங்கு 16 தீர்த்தகினறுகள் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.
ஏமாற்றம் அடைந்த பக்தர்கள்
இந்த சூழலில் இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாமல் காலதாமத திறக்கப்பட்டது. இருந்த போதிலும் ஆடி அமாவாசைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் முறையான திட்டமிடல் இல்லாததால் இன்று (நேற்று) வரை காவிரி துலாக்கட்டத்திற்கு காவிரி தண்ணீர் வந்து சேரவில்லை. இதன் காரணமாக வெறிச்சோடி கிடக்கும் காவிரி துலாக்கட்டத்தில் ஆடி அமாவாசையான நேற்று அதிகாலை முதல் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதிலும், மயிலாடுதுறை சமூக ஆர்வலர்கள் அப்பர்சுந்தரம் போன்றவர்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் மூலம் காவிரி துலாக்கட்டத்தில் தற்காலிக தண்ணீர் விட்டும், ஷவர் அமைந்து கொடுத்தும் பக்தர்கள் நீராட வழிவகை செய்துள்ளனர்.