செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்ளவதால் ஏற்படும் நன்மைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
தெய்வீக விரதங்கள்:
அன்பார்ந்த abp நாடு வாசகர்களே உங்களுடைய ராசி எதுவாக இருந்தாலும் நிச்சயமாக அதற்கென்று ஒரு பரிகாரம் உண்டு . ஆனால் பரிகாரம் செய்து விட்டால் அனைத்தும் சரியாகி விடுமா என்றாலும் இல்லை. முன்னோர்கள் ஒவ்வொரு கிழமைகளுக்கும் ஒரு கிரகத்தின் சக்தியை வைத்திருக்கிறார்கள் . அந்தந்த கிரகங்கள் அந்தந்த கிழமைகளை ஆள்கின்றன. அதேபோல் அந்த கிரகங்களின் தீமை நம்மை அண்டாமல் இருக்க அந்தந்த கிழமைகளில் குறிப்பிட்ட தெய்வங்களை மனமுருகி வேண்டுதல் செய்தால் நிச்சயமாக அது நமக்கு பலனளிக்கும் என்றும் கூறப்படுகிறது .
செவ்வாய்க்கிழமை விரத மகிமைகள் :
செவ்வாய்க்கிழமை முருகன், துர்கை அம்மனின் மற்றும் ஆஞ்சநேயருக்கு உகந்த தினமாகும். அவர்களை மனம் உருகி செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்தால் நிச்சயமாக நமக்கு பலன் உண்டு. செவ்வாய்க்கிழமை நல்ல விஷயங்களுக்கு ஆகாது என்றும் அந்த செவ்வாய்க்கிழமைகளில் எந்த ஒரு நல்லதும் செய்யக்கூடாது என்றும் முன்னோர்கள் சொன்னாலும் கூட செவ்வாய்க்கிழமைக்கு அதீதமான எதிர்ப்பு ஆற்றல் உண்டு. எதிரிகளை வெல்லக்கூடிய சக்தி உண்டு. தீராத வியாதிகளை குணமாக்கும் தன்மை உண்டு. அதேபோல எவ்வளவு பெரிய கடன் தொல்லைகள் இருந்தாலும் அதை தீர்க்கக் கூடிய சக்தி செவ்வாய்க்கிழமைக்கு உண்டு. செவ்வாய்க்கிழமை என்பது தீர்க்கவே முடியாத பல பிரச்னைகளுக்கு தீர்வாக அமையக்கூடிய தினம். உங்களுடைய மலையளவு பிரச்னையை கடுகளவாக தீர்க்கக் கூடிய தினம். இப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமையில் மனம் உருகி உங்களுக்கான இஷ்ட தெய்வத்திற்கு நீங்கள் விரதம் இருக்கும் போது நிச்சயமாக அதற்கு பல நூறு மடங்கு பலன் உண்டு .
செவ்வாய்க்கிழமையில் எப்படி விரதம் இருக்க வேண்டும் ?
காலையில் எழுந்து நீராடி விட்டு பயபக்தியுடன் பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய தெய்வத்திற்கு முன்பாக விளக்கு ஏற்றி 15 நிமிடத்திற்கு தியானத்தில் ஈடுபட வேண்டும். எந்த ஒரு வேண்டுகோளையும் வைக்கக் கூடாது. மனம் ஒரு நிலையாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய தியானம் 15 நிமிடத்திற்கு மேல் நிச்சயமாக இருக்கலாம். அப்படி இருக்கும் சமயத்தில் உங்களுடைய வேண்டுதல்கள் உங்களுடைய மனம் வாயிலாகவே நீங்கள் வணங்கும் தெய்வத்தின் காதுகளுக்கு சென்றடையும். ஒருவேளை உங்கள் வீட்டில் பூஜை அறை இல்லை என்றாலும் பரவாயில்லை நீங்கள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு இருக்கின்ற அறையிலேயே அமைதியாக தெய்வத்தை வழிபடுங்கள்.
என்ன பிரச்சனைகளுக்கு, எந்த தெய்வம் ?
உங்களுக்கு ஒரு வேலை எதிரிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் முருகன். முருகனின் துணை இருக்கும்போது சர்வ எதிரிகளும் இல்லாமல் போவார்கள். குறிப்பாக முருகப்பெருமானுக்கு உகந்த நேரம் ஆன செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணி முதல் 7 மணி வரை குளித்து நீராடி விட்டு சுத்தபத்தமாக முருகனின் கந்த சஷ்டி கவசத்தை நீங்கள் பாராயணம் செய்து வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய எதிரிகள் தொல்லையோ அல்லது உங்களை ஒடுக்க வேண்டும் என்று நினைக்கும் மற்றவர்களையோ முருகன் பார்த்துக் கொள்வார். பார்த்துக் கொள்வார் என்றால் அவர்களை அழிப்பார் என்று அர்த்தமல்ல. அவர்களை உங்கள் வாழ்க்கையில் தொல்லை கொடுக்காதவாறு நகர்த்தி வைப்பார்.
துர்கை அம்மன்:
துர்கையை பொறுத்தவரை நீங்கள் எந்த ஒரு காரியத்தில் மாட்டிக் கொண்டாலும் அதை தாயிடம் எப்படி கூறுவீர்களோ அதே போன்று அன்போடு நீங்கள் துர்கை அன்னை இடம் கூறலாம். செவ்வாய்கிழமையில் துர்கை அம்மனுக்கு விரதம் இருந்து மனதார அவரை வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும். தடை தாமதத்தோடு நடைபெறுகின்ற எந்த காரியங்களும் உங்களுக்கு இனி நடைபெறாது. வெகு நாட்களாக புத்திர பாக்கியம் இல்லை, நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் கைக்கு வரவில்லை, எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை என தாமதமாக கூடிய எந்த ஒரு பிரச்னையும் துக்கை அம்மன் தீர்த்து வைப்பார். நம்பிக்கையோடு விரதம் இருந்து வந்தால் உங்கள் நம்பிக்கைக்கு பலன் உண்டு.
ஆஞ்சநேய பகவான்:
ஆஞ்சநேயரை பொருத்தவரை வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பார். 10 பேர் ஒரு காரியத்தை செய்தால் அதில் உங்களுடைய காரியங்கள் மிகப்பெரிய அளவில் சாதனையாக மாறக்கூடிய சிறப்பான தன்மைகளை ஆஞ்சநேயர் உங்களுக்கு வாரி வழங்குவார். மற்றவர்களால் முடியாது என்று இருக்கும் காரியங்களை கூட உங்களால் செய்ய முடியும் என்ற நிலைக்கு ஆஞ்சநேயரின் வழிபாடு கொண்டு வரும். செவ்வாய்க்கிழமையில் ஆஞ்சநேயருக்கு விரதம் இருந்து மனம் உருகி பக்தியுடன் பிரார்த்தனை செய்தால் உங்களுக்கான வாய்ப்புகள் வாயிலை தேடி வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
செவ்வாய்க்கிழமையில் விரதம் இருப்பவர்கள் கடுமையான விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இல்லை. காலையில் பயபக்தியுடன் தெய்வத்தை வணங்கி விட்டு சிறிது நீர் ஆகாரமோ அல்லது பழ வகைகளையும் உண்டு முழு விரதத்தை கடைபிடிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருங்கள் தெய்வத்தின் அனுக்கிரகத்தை பெறுங்கள்!!!