கடந்த மாதம் 16-ஆம் தேதி பிறந்த ஆடி மாதம் நாளை மறுநாளுடன் முடிகிறது. இதையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை ஆவணி மாதம் பிறக்க உள்ளது. ஆடி மாதம் என்றாலே ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி செவ்வாய், ஆடிக்கிருத்திகை என சிறப்பு வாய்ந்த நாட்கள் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக, ஆடி மாதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக ஆடி அமாவாசை கருதப்படுகிறது.


ஆடி அமாவாசை:


இந்த ஆடி மாதத்தில் இரண்டு ஆடி அமாவாசைகள் வருகிறது. ஒரு அமாவாசை ஆடி பிறந்த கடந்த மாதம் 16-ந் தேதியே பிறந்துவிட்டது. தற்போது மற்றொரு அமாவாசை நாளை பிறக்க உள்ளது. வழக்கமாக இதுபோன்று இரண்டு ஆடி அமாவாசை வந்தால் இரண்டாவது வரும் அமாவாசை தினமே பக்தர்களால் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படும். அந்த அடிப்படையில் நாளை பிறக்கும் ஆடி அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.




பொதுவாக ஆடி அமாவாசை என்றாலே பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம் ஆகும். கோயில்களில் உள்ள குளக்கரைகளில், ஆற்றங்கரைகளில், கடற்கரைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம். இந்த நிலையில், 2-வது ஆடி அமாவாசை என்பதால் நாளையே பெரும்பாலானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பார்கள்.


திதி அளிப்பது எங்கே?


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தர்ப்பணம் அளிப்பது என்றால் அனைவரது எண்ணத்திற்கும் முதலில் வருவது ராமேஸ்வரம் ஆகும். இதனால், நாளை ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி கரையில் தர்ப்பணம் அளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.




ஜாதகத்தில் பித்ருதோஷம் உள்ளவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள திருப்புல்லாணி கோயிலுக்கு சென்று திதி அளிப்பது மிகவும் நல்லது ஆகும். மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள திலதர்ப்பணபுரி கோயில், ஈரோட்டில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் ஆலயம், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் ஆலயம், வரமூர்த்தீஸ்வரர் ஆலயம், திருவள்ளூரில் உள்ள வீரராகவர் கோயில்களிலும் தர்ப்பணம் அளிப்பது சிறப்பு ஆகும்.


மேலும், திருநெல்வேலியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம், ரமணமகரிஷி பிறந்த திருச்சுழி ஆகிய இடங்களிலும் தர்ப்பணம் அளிக்க பக்தர்கள் நாளை குவிவார்கள்.


ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் அளிப்பதால் நமது முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம் ஆகும்.


மேலும் படிக்க: Aavani Month 2023: பக்தர்களே.. ஆவணி மாதம் ஏன் சிவபெருமானுக்கு அத்தனை சிறப்பு தெரியுமா..?


மேலும் படிக்க: Aavani Rasipalan: பிறக்கப்போது ஆவணி.. அமோகமாக இருக்கப்போகும் ராசிக்காரங்க யாரு தெரியுமா..?