உலக நாடுகள் அவ்வப்போது ஏதாவது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முடங்கி மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பினாலும் இன்னும் கொரோனா வைரஸ் மீதான அச்சமும், மற்ற வைரஸ்கள் ஏதாவது பரவிவிடுமோ என்ற அச்சமும் மக்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது.


முதல் உயிரிழப்பு:


உலகிலேயே சீனாவில்தான் வித்தியாசமான வைரஸ்கள் பாதிப்பு அடிக்கடி அரங்கேறி வருகிறது.  அந்த வகையில் தற்போது சீனாவில் உலகிலேயே முதன்முறையாக பறவைக்காய்ச்சலுக்கு மனித உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பேர்ட் ப்ளூ வைரஸ் எனப்படும் பறவைக்காய்ச்சல் வைரசின் ஒரு வகையான எச்.3.என்.8 பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துள்ளது.


இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் பகுதியில் உள்ள 56 வயதான பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அந்த நாட்டில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 3வது பெண் இவர் ஆவார். கடந்த மாத இறுதியில் இவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூழலில், அவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதை உலக சுகாதார மையம் உறுதி செய்துள்ளது.


பறவைக்காய்ச்சல் வைரஸ்:


சீனாவில் சமீபகாலமாக பறவைக்காய்ச்சல் பாதிப்பு பெரும் சிக்கலாக பொதுமக்களுக்கு மாறியுள்ளது. பறவைக்காய்ச்சல் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், சீன அரசாங்கமும் தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், சீனாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.


இந்த நிலையில், பறவைக்காய்ச்சல் வைரசின் எச்.3.என்.8  ரக வைரஸ் பாதிப்பால் 3 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 56 வயது பெண் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை அந்த நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.


பரவும் தன்மை:


இந்த வைரஸ் தொடர்பாக உலக சுகாதார மையம், கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த வைரஸ் ஒருவருக்கு ஒருவர் எளிதில் பரவும் திறனைக் கொண்டிருக்கவில்லை என்று தோன்றுகிறது. எனவே, சர்வதேச அளவில் மனிதர்களிடையே பரவும் அபாயம் குறைவாகவே கருதப்படுகிறது என்று தெரிவித்ததாக சீனா கூறியுள்ளது. தொடர்ந்து இந்த வைரசின் தன்மை குறித்து அந்த நாட்டு அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.


கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறகு உலக நாடுகள் மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை மருத்துவ நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளையும் செலவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க:World Covid Spike: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65.78 கோடியாக அதிகரிப்பு.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்..


மேலும் படிக்க:Summer: இது வெயில்காலம்..! குளிக்கும்போது, துவைக்கும்போது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?