இங்கிலாந்தின் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் பசு மாட்டை வழிபட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரதமர் தேர்தல்
இங்கிலாந்து பிரதமரான கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து, இங்கிலாந்தில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனக் அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று, இறுதி வேட்பாளராக களத்தில் உள்ளார். இவரை எதிர்த்து 46 வயதான லிஸ் டிரஸ் என்பவர் களத்தில் உள்ளார். இவர்கள் இருவரில் ஒருவர் தான் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் ஆகப்போகிறார்கள் என்னும் நிலையில் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
எப்படி தேர்வு செய்யப்படுகிறது?
கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 2 லட்சம் உறுப்பினர்கள்தான் பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய உள்ளனர். பிரதமர் தேர்வுக்கான வாக்கெடுப்பு தற்போது தபால் முறையில் நடைபெற்று வருகிறது. வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட்டு பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பது தெரிய வரும். அந்த வகையில், இங்கிலாந்து பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் தேர்தல் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பசு மாட்டிற்கு பூஜை செய்த விடியோ வைரல் ஆகி உள்ளது.
பசுமாட்டிற்கு பூஜை
இங்கிலாந்தின் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் லண்டனில் ஒரு பசு மாட்டுக்கு 'கோ பூஜை' செய்தனர். கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற இந்த கோ பூஜை நிகழ்வு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. லண்டனில் உள்ள பக்திவேதாந்தா மனோர் கோவிலில் இந்த கோ பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பூஜையின் போது பசு மாட்டிற்கு ஆரத்தி காண்பித்து, குங்குமம் வைத்து, ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் வழிபட்டனர்.
நெட்டிசன்கள் விமர்சனம்
இந்த விடியோ இன்டர்நெட்டில் வைரல் ஆனதை தொடர்ந்து, அவருக்கு பலர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவரை விமர்சனமும் செய்து வருகின்றனர். கமெண்டுகளில் சிலர் இங்கிலாந்து பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டும் இது போன்ற மூட நம்பிக்கைகளை செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இங்கிலாந்தில் அடுத்த பிரதமருக்கான தேர்வானது இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ரிஷி சுனக், இந்தி உள்பட பல மொழிகளில் பேசி வாக்குகள் சேகரித்து வருகிறார். இதனால் அங்குள்ள வேற்று மொழி காரர்களை கவர்ந்து வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்