தான் அமெரிக்காவின் அதிபரானால் அரசு நிறுவனங்களை மூடும் திட்டம் உள்ளதாக அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 

உலக நாடுகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. தற்போதைய அமெரிக்க அதிபரான ஜோ பைடன் எதிர்வரும் தேர்தலிலும் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும் அந்த கட்சியில் ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் களத்தில் உள்ளனர். 

இதேபோல குடியரசு கட்சியின் சார்பில் களம் காண பல முனை போட்டி நிலவுகிறது. இதில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி, விவேக் ராமசாமியும் களத்தில் உள்ளனர். சொந்த கட்சியில் யாருக்கு அதிக ஆதரவு கிடைக்கிறதோ அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பதால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Continues below advertisement

அந்த வகையில் விவேக் ராமசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவருடைய கருத்துகளுக்கு ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் விமர்சனங்களும் எழுந்துள்ளது. அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஒருவேளை வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால்,  டிரம்புடன் சேர்ந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

அரசு நிறுவனங்களை மூடும் திட்டம்

அந்த வகையில்  தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு விவேக் ராமசாமி பேட்டியளித்தார். அப்போது, ‘தான் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில் பல்வேறு அரசு நிறுவனங்களை மூடப்படும்’ என தெரிவித்தார். மேலும் 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன் என்றும் கூறியுள்ளார். 

அதாவது,  4 ஆண்டு பதவி காலத்துக்குள்  FBI என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு, கல்வித்துறை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், மது, புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பணியகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை மூடும் திட்டம் உள்ளது. சிறப்பான  அரசை நடத்த,  நாம் தேர்ந்தெடுக்கும் நபர்கள்தான் உண்மையில் அரசை நடத்துபவர்களாக இருக்க வேண்டும். இந்த பதவி நீக்கம் செய்யப்படுபவர்களில் 30% பேர் அடுத்த 5 ஆண்டுகளில் பணி ஓய்வு பெறுபவர்கள் தான். அரசுக்கு எதிராக கருத்துகளை கொண்டவர்களை பதவி நீக்கம் செய்து, ஒத்த எண்ணம் கொண்ட அதிகாரிகளை நியமிக்க  திட்டம் உருவாக்கப்படும்” எனவும் விவேக் ராமசாமி கூறியுள்ளார். வழக்கம்போல் அவரது கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 


மேலும் படிக்க: சீமான் வழக்கில் திடீரென புகாரை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி.. இரவோடு இரவாக புகாரை வாபஸ் பெற்றது ஏன்..?