இன்னும் சில நாட்களில் உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்யா தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ரஷ்யா-  உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில்  கூட்டம்  முன்னதாக நேற்று நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், "ஐக்கிய நாடுகள் அவையில் அடிபப்டை லட்சியத்தை மீறும் வகையில் ரஷ்யாவின் செயல்பாடுகள் உள்ளன. லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. விதிமுறை சார்ந்த மற்றும் உள்ளடக்கிய சர்வதேச விதிமுறைகளை ரஷ்யா புறக்கணித்து விட்டது" என்று தெரிவித்தார். இதற்கான, பலனை அந்நாடு அனுபவித்தே ஆக வேண்டும் என்றும் கூறினார்.   


தரைப்படை, கடற்படை, விமானப்படை உள்ளிட்டவை மூலம் வரும் நாட்களில் உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்யா தயாராகி வருகின்றன என்பதை சில தகவல்கள் மூலம் தெளிவாக கணிக்க முடிகிறது என்றும் அவர் கூறினார். 


ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் டி.எஸ் திருமூர்த்தி பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில்," உக்ரைன் - ரஷ்யா நிலவும் பதற்றத்தை உடனடியாக தணிப்பதற்கு இந்திய முழு ஆதரவளிக்கும். பதற்றமான சூழல் மேலும் அதிகரித்தால், உக்ரைனில் வாழும் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய பேச்சு வார்த்தைகளை நடத்தி அமைதி தீர்மானம் கொண்டு வரப்படவேண்டும். இதற்கான, அனைத்து முயற்சிகளையும் இந்திய வரவேற்கிறது" என்று தெரிவித்தார். 









உக்ரைன் விவகாரத்தில் இந்திய நடுநிலையோடு செயல்பட்டு வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்றைய கூட்டத்தில், ரஷ்யா - உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவப்படைகளைப் பற்றி இந்திய எந்த கருத்தும் பதிவு செய்யவில்லை. மேலும், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் என்ற கருத்தின் மூலம் உக்ரைன் விவகாரத்தை சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு நிலையான மற்றும் தூதரகம் மூலமான பேச்சுவரத்தையைத் தான் இந்திய விரும்புகிறது என்பதும் புரிய வருகிறது. 


குவாட் கூட்டமைப்பு, வர்த்தக உறவு, ராணுவக் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவுடனான நட்புறவை இந்திய பலப்படுத்திக் கொண்டாலும் , ரஷ்யாவுடனான  கூட்டணியை இந்திய தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. உதரணமாக, கடந்த 2014ம் ஆண்டு, உக்ரைன் நாட்டின் நிலப்பகுதியில் ஒன்றாக இருந்த கிரிமியாவை, ரஷ்யா இணைத்தது தொடர்பாக ஐக்கிய நாடுகள அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இந்திய கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது. 


மேலும் , உக்ரைன் விவகாரம் தொடர்பாக பாகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக, கடந்த 2022  பிப்ரவரி 1ம் தேதி கொண்டுவரப்பட்ட  தீர்மனைத்திலும் இந்திய, சீனா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்துவிட்டன. இந்த நிலையில் தான், 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா பாதுகாப்பு அவையில் நேற்று உக்ரைன் விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றது.     


ரஷ்யா- உக்ரைன் தீர்வு :  


தற்போது, நேட்டோ மற்றும் ரஷ்யா படைகள் உக்ரைனுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன. மறுபுறம், போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பல்வேறு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள்  உக்ரைன் விவகாரத்தில் திறந்த மனத்தோடு பேச்சுவார்த்தையைத் தொடர  விரும்புகின்றனர். இதற்கு, பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக, ஜெர்மனி, பிரான்ஸ்  நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் ரஷ்யா நாட்டின் எண்ணெய் மற்றும் இதர வளங்கள்  மீது அதிக முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது.




மேலும், ஒட்டுமொத்த ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பையும்  (European Security Architecture) மறுபரிசீலனை செய்ய வேண்டும், நாட்டோ அமைப்பு தனது இருத்தலை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற மையக்கருத்துடன் தான் ரஷ்யா தற்போது உக்ரைன் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. சுயாதீனமான ஐரோப்பிய பாதுகாப்பு என்ற  ரஷ்யாவின் நிலைப்பாட்டை பிரான்ஸ் தனக்கு சாதகமாக பார்க்கிறது. 


முன்னதாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின்  (AUKUS) கூட்டமைப்பை அமெரிக்கா அறிவித்தது. 21-ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ப இந்தோ- பசிபிக் பகுதியில் தடையற்ற அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த கூட்டமைப்பு செயல்படும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். கூட்டமைப்பின் முதற்கட்ட நடவடிக்கையாக, அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டின் துணையுடன் நீர்மூழ்கிக் கப்பலின் இயக்கத்தை ஆஸ்திரேலியா தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. '




 


இந்தோ- பசிபிக் கட்டமைப்பின் முக்கிய பங்குதாரர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும்  இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் , 'AUKUS' கூட்டணி தேவையற்றது என்று கருத்து தெரிவித்துள்ளன.


மேலும், தன்னிடம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயில் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து,  இந்தோ- பசிபிக் பிராந்திய  நாடுகளிடம் இருந்து அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் ஆஸ்திரேலியா அரசின் முடிவுக்கு பிரான்ஸ் அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் இந்த போக்கு, நாட்டோ அமைப்பைத் தாண்டிய ஐரோப்ப பாதுகாப்பை என்ற பிரான்ஸின் அரசியல் நிலைப்பாட்டை வலிமையடைய செய்கிறது.


எனவே, உக்ரைன்- ரஷ்யா விவகாரம் இருநாடுகளுக்கு இடையிலான  பிரச்னை என்பதைத் தாண்டி, சர்வதேச அரசியலாக உருவெடுத்துள்ளது. அதன், காரணமாக பல்வேறு மட்டத்திலான பேச்சு வார்த்தைகளும், தீர்வுகளும், மிரட்டல்களும் தொடங்கியுள்ளன.        


சமீபத்திய முன்னேற்றங்கள்: 


உக்ரைன் பகுதியிலிருந்து ரஷ்ய துருப்புக்கள் குறைந்த அளவில் விலக்கிக்கொள்ளப்படுவதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ராணுவ ஒத்திகைகள் அந்த பகுதியில் தொடரும் என்றும் அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரஷ்யாவின் துருப்புகள் குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் குறைவதற்கான வாய்ப்புகள் தெரிவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


 இருப்பினும், உக்ரைன் எல்லையில் ராணுவப்படைகளை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகளை ரஷ்யா உறுதி செய்ய வேண்டும் என்று நேட்டோ அமைப்பின் தலைமை செயலாளர் Jens Stoltenberg வலியுறுத்தியுள்ளார். நேட்டோ நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடைபெறவுள்ளதாகவும், Jens Stoltenberg  கூறினார். 




இதனிடையே, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம், கிரைமியா தீபகற்ப பகுதியில் நடைபெற்று வந்த ராணுவ அணிவகுப்பு முடித்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான காணொலி ஆதாரமும் வெளியிடப்பட்டுள்ளது.


உக்ரைன் பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் படைகள் ரஷ்யாவில் உள்ள ராணுவ தளங்களுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் ராணுவ இணையதளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும், வங்கிகளின் இணையதளங்களும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தாமல் இருந்தால் அடுத்த வாரம் சமரசம் பேசத் தயார் என அமெரிக்கா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Also Read: TNPSC Press Meet LIVE: டிஎன்பிஎஸ்சி செய்தியாளர் சந்திப்பு: குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு தேதி... 6 ஆயிரம் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு!