அல்ஜீரிய அதிபர் அப்தெல் மஜித் டெப்போய்ன் அந்த நாட்டு அரசு இளைஞர்களுக்கு வேலையின்மை கால நலன்களை அறிமுகப்படுத்தும் எனக் கூறியுள்ளார். வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியா கிட்டத்தட்ட 15 சதவிகித வேலையின்மை விகிதத்துடன் போராடி வருகிறது. இந்த நிலையில்தான் அதிபர் அப்தெல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


"இளைஞர்களின் கண்ணியத்தைக் காக்க" மானியம் கொடுக்கப்படும்" என்று அல்ஜீரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.


அல்ஜீரியா தனது வேலையின்மை பிரச்னைக்கு மாதாந்திர மானியமாக 13,000 தினார்களை (சுமார் 100 அமெரிக்க டாலர்) வழங்கும், இது பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு என்று டெப்போய்ன் கூறியுள்ளார்.



இந்த மானியம் அந்த நாட்டின் குறைந்தபட்ச ஊதியமான 20,000 தினார்களில் (142 அமெரிக்க டாலர்கள்) கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்கு சமமானதாகும் - இந்த திட்டம் மார்ச் மாதத்தில் தொடங்கும்.
சுமார் 45 மில்லியன் மக்களைக் கொண்ட ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதியாளரான அல்ஜீரியா, அதன் நாட்டு வருவாயில் 90 சதவீதத்தை ஹைட்ரோகார்பன் மூலம் ஈட்டுகிறது.






இது மருத்துவ நன்மைகளுடன் கூடியது மேலும் அதே நேரத்தில் நுகர்வோர் பொருட்கள் மீதான சில வரிகளும் வேலையின்மையால் பாதிக்கப்படுவோர்களுக்காக இடைநிறுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


இளைஞர்களுக்கான இந்த மானியங்கள் 2022 வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று டெபோன் கூறியுள்ளார். நவம்பரில், அல்ஜீரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிப்படைப் பொருட்களுக்கான தாராளமான அரசு மானியங்களை ரத்து செய்யக்கோரி வாக்களித்தனர். இந்த மானியங்கள் நீண்டகாலமாக பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க உதவியது. ஆனால் எரிசக்தி மூலமான வருவாய் வீழ்ச்சியடைந்ததால் நாட்டின் வரவு செலவுத் திட்டங்களில் இது சிரமத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், அரபு தேசங்களுக்கான உச்சிமாநாடு அண்மையில் அல்ஜீரியாவில் நடக்கவிருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே அது இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் நடைபெறும் என்றும் அதிபர் பேட்டியில் அறிவித்துள்ளார்.மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்தநிலையில் அது தற்போது நவம்பரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.