அடுத்த மாதம் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால், சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக முடக்க நினைக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. 


டார்கெட் செய்யப்படுகின்றனரா எதிர்க்கட்சி தலைவர்கள்?


நில மோசடி வழக்கில் முன்னாள் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.  


அதேபோல, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.  அந்த வகையில், கடந்த 2018ஆம் ஆண்டு, அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா குறித்து (தற்போது மத்திய அமைச்சர்) ராகுல் காந்தி சில கருத்துகளை தெரிவித்திருந்தார். 


ராகுல் காந்திக்கு பிணை வழங்கிய சிறப்பு நீதிமன்றம்:


2018ஆம் ஆண்டு, கர்நாடக தேர்தலை முன்னிட்டு பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, அமித் ஷாவை கொலை குற்றம் சாட்டப்பட்டவர் என கூறினார். இதை ஆட்சேபனைக்குரிய கருத்து எனக் கூறி,  ராகுல் காந்திக்கு எதிராக பாஜக நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. ஜாமீன் தொகையாக 25,000 ரூபாய் தனிப்பட்ட உத்தரவாத தொகையாக 25,000 ரூபாய் செலுத்தும்படி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது, தான் எந்த தவறையும் செய்யவில்லை என ராகுல் காந்தி தரப்பு வாதிட்டது.


குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவி வகித்தபோது, பலர் போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டதாக கடந்த 2005ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அமித் ஷாவை, சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த 2015ஆம் ஆண்டு விடுவித்தது.


கடந்த ஜனவரி 18ஆம் தேதி, நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்டு வருவதால், அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. விசாரணைக்கு நேரில் ஆஜராகாத ராகுல் காந்தியை பாஜக கடுமையாக விமர்சித்தது.


இச்சூழலில்தான், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அவரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: Board Exams: மாணவர்கள் ஷாக்.. 2025-26 கல்வியாண்டு முதல் ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு.. மத்திய அரசு அறிவிப்பு