இலங்கையில் உணவு நெருக்கடி நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. மேலும், அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
பொருளாதார சீர்குலைவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த இலங்கை மக்களின் எழுச்சி போராட்டம் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகினர். தற்போது அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்க அடக்குமுறையை கையாள்வதாக குற்றம்சாட்டி தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா அலை, தவறான பொருளாதார கொள்கை ஆகிய பிரச்சனைகளில் இருந்து இலங்கை இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், அந்நாட்டில் உணவு நெருக்கடி நிலை ஏற்படும் என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2.2 கோடி பேரில் 17 லட்சம் பேருக்கு உதவி தேவைப்படுவதாக ஐ.நா. சபை மதிப்பிட்டுள்ளது.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள ஐ.நா. அமைப்புகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் தேவைப்படுவோருக்கு உணவு அளிக்க 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தற்போது தேவையாக உள்ளது. ஆனால், உணவு நெருக்கடியால் பாதிக்கப்படும் ஏழை மக்களின் எண்ணிக்கை அதிகமானால் கூடுதல் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும்.
அறுவடை பாதிப்பு, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் உணவின்றி தவிப்போர் எண்ணிக்கை இரட்டிப்பாகி 34 லட்சமாக உயர்ந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உதவ மேலும் 570 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 13.1% -ஆக இருந்த இலங்கையின் ஏழ்மை விகிதம், இந்த ஆண்டு 25.6% அதிகரித்துள்ளதாகவும் ஐ.நா. அமைப்புகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கனடா தப்பும் வழியில் படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் 303 பேர் நேற்று மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கடுமையான பொளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அகதிகளாக வெவ்வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், 303 பேர் குடும்பம் குடும்பமாக சட்ட விரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இவர்கள் சிங்கப்பூர், வியாட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளில் கடல் எல்லைக்கு அருகாமையில் நேற்று முன்தினம் சென்றபோது, படகு திடீரென பழுதாகி உள்ளது. இதனால் படகு கடலில் மூழ்கத் தொடங்கியதால் அதிலிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடுவதாக ஆடியோ பதிவு ஒன்று இலங்கை கடற்படைக்கு பகிரப்பட்டது. இதுகுறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர், வியாட்நாம் நாட்டின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த 39 குழந்தைகள், 264 ஆண்கள் என மொத்தம் 303 பேரை மீட்டனர்.