நேபாளத்தின் மேற்கே டோடி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், நேபாளத்தின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9.56 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன்பின்னர் இன்று அதிகாலை 2.12 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 அலகுகளாக பதிவானது. இதில் வீடு இடிந்து 3 பேர் உயிரிழந்தனர்.
இது கைராகாவன் பகுதியில் ஏற்பட்டு உள்ளது. இதன் தாக்கம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் உணரப்பட்டன.
நேற்று நள்ளிரவு முடிந்து, அதிகாலை தொடங்கிய நேரத்தில், தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தோர், அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு, குழந்தைகளுடன் வெளியே ஓடி வரும் அளவுக்கு பெரும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கவியல் மைய தகவலின்படி, ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் ஏற்பட்ட வலுவான நில நடுக்கத்தின் அதிர்வுகள்தான், டெல்லியில் உணரப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.
தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புற நகரங்களான நொய்டா, குருக்ராம், காஜியாபாத் உள்ளிட்ட பல பகுதிகள் , நேற்று நள்ளிரவில் சரியாக இரவு 1.58 மணியிலிருந்து 2.08 மணி வரை பெரும் பரபரப்புக்கு உள்ளானது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் திடீரென அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதற்குக் காரணம், நேபாள நாட்டின் எல்லைப்பகுதியை மையமாக வைத்து பதிவான நில நடுக்கம்தான்.
தரைக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள்தான், டெல்லி, லக்னோ உள்ளிட்ட பல வடமாநில நகரங்கள் மற்றும் ஊரகப்பகுதிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 3 முதல் 10 வினாடிகள் வரை இந்த நில அதிர்வுகள் டெல்லியில் உணரப்பட்டுள்ளன. ஆனால், இந்த நில அதிர்வு ஏற்படுத்திய பயத்தால், விடியற்காலை வரை, பொதுமக்கள் தங்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, வீதிகளில் நின்றுக் கொண்டிருந்ததாக, டெல்லிவாசிகள் தெரிவித்தனர்.
தேசிய நிலநடுக்க அறிவியல் மையத்தின் அறிவிப்புபடி, நேபாள எல்லைப்பகுதியில் மையமாகக் கொண்டு இந்த நலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற வலுவான நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. நேபாள பகுதியில் நேற்று காலை 4.5 என்ற அளவிலும், இரவு 8. 40 மணி அளவில் 5. 1 அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், அதிகாலை 1.57 மணியளவில் 6.3 என்ற அளவில் வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக, இந்தியாவின் உத்தராகண்ட் மற்றும் நேபாள எல்லைப்பகுதிகள் அருகில் உள்ள இமாலய மலைப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
2 மணியளவில் வீதிகளுக்கு ஓடிவந்த டெல்லிவாசிகள், உடனடியாக சமூக வலைதங்களில், நில அதிர்வு தொடர்பான தகவல்களைப் பதிவு செய்தனர். ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதங்களிலும் இந்தத் தகவல்கள் ஆயிரக்கணக்கானோரால் வைரலாகிக் கொண்டிருந்தது. பலரும் தங்களது இரவுகளை வீதிகளைக் கழித்தாகவும், அந்த சில நொடிகள், பல நிமிடங்களாகப் பெரும் பயத்தை ஏற்படுத்தியதாகவும் பலர் குறிப்பிட்டிருந்தனர், டெல்லியில் பல நில நடுக்கங்களைப் பார்த்திருந்தாலும், இந்த முறை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பெரும் அதிர்வாக, நீண்ட நேரம் இருந்ததாக சிலர் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். டெல்லி மட்டும் இல்லாமல், நொய்டா, குருக்ராம் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள், உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகள் முதல் லக்னோ வரை இந்த அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.