கஞ்சாவை பயிரிடுவதையும், வைத்திருப்பதையும் தாய்லாந்து அரசு சட்டப்பூர்வமாக்கி உள்ளது.  மேலும் 10 லட்சம் கஞ்சா நாற்றுக்களை விநியோகிக்கவும் அந்நாட்டு பொது சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஆதரவாக தாய்லாந்தை சேர்ந்த வழக்கறிஞர்கள், கஞ்சாவை வாங்கி கொண்டாடினர். இந்த தடை நீக்கம் குறித்து 24 வயதான ரிட்டிபோங் கூறுகையில், "நான் கஞ்சா புகைப்பவன் என்று சத்தமாக சொல்ல முடியும். கடந்த காலத்தில் இது சட்டவிரோத போதைப்பொருள் என்று முத்திரை குத்தப்பட்டதைப் போல நான் மறைக்கத் தேவையில்லை என தெரிவித்தார். அரசாங்கத்தை பொறுத்தவரை மருத்துவப் பயன்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமே அவர்களின் வேலை, இறுதியாக கஞ்சாவின் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்குகிறோம் என்பது தெளிவாகிறது. இது தீமைகளை விட அதிக நன்மை என்பதை அரசாங்கமும் புரிந்து கொள்கிறது என நீண்டகால சட்டப்பூர்வ ஆர்வலருமான ரத்தபோன் சன்ராக் தெரிவித்துள்ளார். 


மருத்துவ பயன்பாட்டுக்காகவே கஞ்சா மீதான தடை நீக்கம்  


மருத்துவப்பயன்பாட்டுக்கு மட்டுமே கஞ்சாவை ஊக்குவிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பொது இடங்களில் புகைப்பிடிப்பது என்பது இன்னும் சட்டப்பூர்வமான குற்றமாகவே கருதப்படுகிறது. இதனை மீறுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனையும், 780 டாலர் அபராதமும் விதிக்கப்படலாம் என அந்நாட்டு சட்டம் எச்சரிக்கிறது. இந்த தடை நீக்கத்தின் மூலம் ஆசிய நாடுகளில் கஞ்சா மீதான தடையை நீக்கிய முதல் நாடு என்ற பெயரை தாய்லாந்து பெற்றுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் உருகுவே மற்றும் கனடா நாடுகளின் சட்ட உதாரணங்களை அந்நாடு பின்பற்றவில்லை. இதுவரை இந்த இரண்டு நாடுகள் மட்டுமே பொழுதுபோக்கு அடிப்படையில் கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கி உள்ளன. 


கஞ்சா பயிரிட ஏற்ற காலநிலை


இந்த தடைநீக்கத்தின் மூலம் மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா பயிரிடும் சந்தையை தாய்லாந்து குறிவைத்துள்ளது. ஏற்கெனவே அந்நாட்டின் மருத்துவ சுற்றுலா வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், வெப்ப மண்டல பகுதியான தாய்லாந்தில் நிலவும் காலநிலை, கஞ்சாவை வளர்பதற்கு ஏற்ற சூழலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கஞ்சா மீதான தடை நீக்கம் குறித்து பேசும் அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல் கூறுகையில், தங்கம் போன்ற மதிப்பு கொண்ட கஞ்சா குறித்து போதிய விழிப்புணர்வு நம்மிடம் வேண்டும், அதனை ஊக்குவிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார். மக்களைச் சரிபார்க்க ரோந்து செல்வதை விடவும் அவர்களைத் தண்டிக்க சட்டத்தைப் பயன்படுத்துவதை விடவும் "விழிப்புணர்வு ஏற்படுத்த" அரசாங்கம் விரும்புகிறது என்றார்.


4000 பேர் விடுதலை


தாய்லாந்து அரசின் இந்த நடவடிக்கையால் ‘’கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் உள்ள குறைந்தது 4,000 பேர் விடுவிக்கப்படுவார்கள்" என்று சர்வதேச மருந்துக் கொள்கை கூட்டமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குனர் குளோரியா லாய் ஒரு மின்னஞ்சல் பேட்டியில் கூறியுள்ளார். மேலும்  கஞ்சா தொடர்பான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணமும் கஞ்சாவும் அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்படும்."