பிஹார் மாநிலத்தில் இறந்த மகனின் உடலைப் பெற மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டதால் வயதான தம்பதி பிச்சை எடுத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


பிஹார் மாநிலம் சமஸ்திபுராவைச் சேர்ந்த வயதான தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் இறந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் காணாமால் போயினார். திடீரென்று இந்தத் தம்பதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் ஒரு ஆண் சடலம் மருத்துவமனையில் உள்ளது. அது உங்களுடைய மகனா என்று அடையாளம் பாருங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. உடனே வயதான தம்பதி மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த உடல் அவர்களின் மகன் தான் என உறுதி செய்தனர். சரி உடலை எடுத்துச் செல்லலாம் என முயன்றபோது ரூ.50 ஆயிரம் தந்தால் தான் உடலை ஒப்படைப்போம் என மருத்துவமனை தரப்பில் கூறிவிட்டனர். இதனால் அவர்கள் பதறிப்போயினர். இருவரும் பரிதாபமாக துண்டை ஏந்தி யாசகம் பெற ஆரம்பத்தினர். அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி காண்போரை கண் கலங்கச் செய்துள்ளது.


மருத்துவமனை ஊழியர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் சரிவர சம்பளம் தராததால் ஊழியர்கள் இவ்வாறாக லஞ்சம் பெறுகின்றனர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


இது குறித்து சமஸ்திபுர் மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் எஸ்.கே.சவுத்ரி கூறுகையில், இதற்கு யார் காரணம் எனக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இது மனிதாபிமானற்ற செயல் என்று கூறியுள்ளார்.இதேபோல் வட இந்தியாவில் பல்வேறு நிகழ்வுகளையும் நாம் பார்த்துள்ளோம். ஆம்புலன்ஸ் இல்லாததால் பிள்ளையின் உடலை சுமந்து சென்ற தந்தை போன்ற செய்திகள் பல வெளியாகியுள்ளன.


மருத்துவமனை அலட்சிய இறப்புகளும் வட மாநிலங்களில் அதுவும் குறிப்பாக பிஹார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலேயே அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.






கோரக்பூர் கோரத்தை மறக்க முடியுமா?


உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில், கடந்த 2017 ஆகஸ்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் பலியான சம்பவத்தை மறக்க முடியாது. உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தைகள் பிரிவில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி இறந்தன. இந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனத்துக்கு நிலுவை தொகையை மருத்துவமனை நிர்வாகம் செலுத்தாத காரணத்தால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையை அந்த நிறுவனம் நிறுத்தியதாக புகார் எழுந்தது.