பாஜக தமிழக தலைவராக நயினார் நாகேந்திரன் இருந்தாலும், சில முக்கியமான முடிவுகளை அண்ணாமலையே எடுப்பதாக சொல்கின்றனர். தனக்கு வேண்டியவர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று நயினார் ஒரு லிஸ்ட் போட்டாலும், டெல்லி பாஜக தலைமையிடம் தனக்கு இருக்கும் லாபியை வைத்து, நயினாரை செயல்பட விடாமல் அண்ணாமலை முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது பாஜகவில்.? பார்க்கலாம்.

மென்மையாக செயல்படும் நயினார் நாகேந்திரன்

கடந்த ஏப்ரல் மாதம் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்றிவிட்டு, அதிமுகவுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவரை தமிழக பாஜக தலைவராக நியமிப்பது தான் சரியாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே, நயினாருக்கு தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழலில், ஆளும் திமுக அரசுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் தீவிரமாக களமிறங்கவில்லை என்று கூறப்படுகிறது. தன்னுடைய தலைமையில் நடைபெறும் போராட்டங்களில் கூட அவர் மென்மையான போக்கையே கடைபிடிக்கிறார் என்று பாஜக தொண்டர்களே முனுமுனுப்பதாக சொல்லப்படுகிறது.

அமித் ஷா-வை தாக்கிப் பேசிய ஆ. ராசா

இச்சூழலில் தான், அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, மத்திய அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக தாக்கிப் பேசினார். ”எதிரிகள் வெவ்வேறு வடிவத்தில் வருவார்கள். மதுரைக்கு வந்த அமித் ஷா டெல்லியை பிடித்துவிட்டோம், ஹரியானாவை பிடித்துவிட்டோம், மராட்டியத்தை பிடித்துவிட்டோம், அடுத்து தமிழ்நாடு என கூறியுள்ளார். முட்டாள்.. டெல்லியில் பார்த்த கெஜ்ரிவால் தனிப்பட்ட தலைவன், ஹரியானாவில் ஒரு தனிமனிதனை தோற்கடித்தீர்கள். மராட்டியத்திலும் ஒரு தனி மனிதனையே தோற்கடித்தீர்கள். ஆனால், ஸ்டாலின் தனி மனிதன் இல்லை, “அவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கருணாநிதி என்ற தத்துவம் உள்ளது” என்று கூறினார்.

அண்ணாமலை போட்ட ஃபோன் கால், டென்ஷனான அமித் ஷா

ஆ. ராசாவின் இந்த பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தாலும், ஆ. ராசாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அண்ணமலை தான் அமித் ஷா-வை தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் இப்படி எல்லாம் நடக்கிறது, ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. அதேபோல், தன்னை ஒருமையில் விமர்சனம் செய்தவர்களுக்கு எதிராக போராட்டம் செய்யக் கூட நயினார் தயங்குகிறாரா என்று அமித் ஷா கடிந்துகொண்டதாக சொல்கின்றர். இதனால், பெயரளவிலேயே கடந்த ஜூலை 1 ஆம் தேதி பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

பாஜக தமிழ்நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அண்ணாமலை.?

அதேபோல், தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை தயரித்துக்கொண்டு அண்ணாமலையை பார்க்க நயினார் சென்றதாகவும், “அண்ணே, ஏற்கனவே இருக்கறவங்க எல்லாம் நான் பார்த்து பார்த்து போட்ட நிர்வாகிகள் தாண்ணே.. அத எதுக்குன்னே இப்ப மாத்திக்கிட்டு...“ என்று அவர் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. டெல்லி பாஜக தலைமையிடம் தனக்கு இருக்கும் லாபியை வைத்து, அண்ணாமலை தான் பாஜக தமிழக தலைவர் என்பதைப்போல் செயல்படுவதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

2026 தேர்தல் - நயினார் தாக்குப்பிடிப்பாரா.?

எந்த ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும், அதை பெரிதுபடுத்தி, அனல் பறக்க பேட்டியளித்து, போராட்டங்கள் நடத்தி, மக்களை திரும்பிப் பார்க்க வைப்பதுதான் அண்ணாமலையின் ஸ்டைலாக இருந்தது. ஆனால், ஒருவர் சொல்லித்தான் போராட்டமே, அதிலும் பெயர் அளவிற்கான போராட்டத்தை நடத்தும் நிலையில் தான் நயினார் நாகேந்திரன் உள்ளார் என்றால், 2026 தேர்தல் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் நிலையில், அதை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார், அவர் தாக்குப் பிடிப்பாரா என்ற கேள்வி எழுகிறது.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை அளவிற்கு அக்ரசிவாக(Aggressive) இல்லை என்பது கண்கூடாக தெரியும் நிலையில், பாஜக மேலிடம் தேர்தலை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.