தஞ்சாவூர்: பள்ளிகளில் மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் சிறப்பாகவும், பின் தங்கியும் இருக்கின்றனர் என்பது தலைமையாசிரியர்களைச் சந்தித்து கலந்தாலோசிக்கப்படுகிறது. சிறப்பாக செயல்பட்ட வட்டாரங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் குறித்து பின்தங்கிய வட்டாரங்களுக்கு கருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Continues below advertisement

தஞ்சாவூரில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அடைவுத் தேர்வு குறித்த ஆய்வு கூட்டம் பங்கேற்ற அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளிகளில் மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் சிறப்பாகவும், பின் தங்கியும் இருக்கின்றனர் என்பது தலைமையாசிரியர்களைச் சந்தித்து கலந்தாலோசிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களிடம் அடைவுத் தேர்வு அறிக்கை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 35 கேள்விகள், 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 கேள்விகள், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 கேள்விகள் மூலம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

Continues below advertisement

இதில், சிறப்பாக செயல்பட்ட வட்டாரங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் குறித்து பின்தங்கிய வட்டாரங்களுக்கு கருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்களுக்கு மிகப் பெரிய பாடத்தைக் கற்றுத் தந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். வெறும் பாடத்தைக் கற்றுத் தருவது மட்டுமல்லாமல், கற்றல் அடைவை அடைந்துள்ளனரா? அதைப் புரிந்து கொண்டுதான் அடுத்த வகுப்புக்கு சென்றனரா? என்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அடுத்த முறை நாங்கள் முன்னேற்ற நிலையில் இருப்போம் என ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அளவில் அடைவுத் திறன் தொடர்பாக 25 ஆயிரம் மாணவர்களை மட்டுமே ஏசர் அமைப்பு மதிப்பீடு செய்தது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையினர் 9.80 லட்சம் மாணவர்களை மதிப்பீடு செய்தனர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் முன்னேற்ற அறிக்கை முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து ஆசிரியர்கள் செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் அடுத்த ஆண்டு முன்னேற்றத்தை எட்டுவோம். அடைவுத் திறன் தொடர்பான ஏசர் அறிக்கையை யுனெஸ்கோ கடுமையாக திட்டி எழுதியுள்ளது. ஏசர் என்ற பெயரில் கொடுக்கப்படும் அறிக்கை மிகவும் அபத்தமானது என்றும், அதை யாரும் பின்பற்றக்கூடாது எனவும் யுனெஸ்கோ கூறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் மொத்த அடைவுத் திறன் 58.41 சதவீதம்.  மதுக்கூர், பட்டுக்கோட்டை, திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்கள் சிறப்பாக உள்ளன. சராசரியாக உள்ள திருவையாறு, அம்மாபேட்டை, பூதலூர் ஆகிய வட்டாரங்கள் அடுத்த முறை நல்ல நிலையை அடைவதற்குக் கவனம் செலுத்த வேண்டும்.

இன்னும் அதிகப்படியாக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ள சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு வட்டாரங்களும் அடுத்த முறை சிறப்பிடத்தைப் பெற வேண்டும் என்றார்.