தாய்லாந்து நாட்டுக்கு செல்ல கட்டணமில்லா விசா(Thailand Visa) சேவை வழங்கப்படும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளதால் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கொரோனா தொற்றுக்குப் பின் இந்திய மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்பது படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கென்று கொரோனாவுக்கு பின் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் அந்நாடுகளுக்கு பயணம் செல்வதை தவிர்த்து வந்தனர். இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளில் சுற்றுலா மூலம் வரும் வருவாய் ஆனது பெரும் சரிவை சந்தித்தது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கென்று பல சலுகைகளை அறிவித்து வருகிறது. 


அந்த வகையில் கடந்த வாரம் இலங்கை நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கை வரும் மக்கள் கட்டணமில்லா விசா சேவையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இது 2024 மார்ச் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம் என நினைக்கு மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. 


இப்படியான நிலையில் தாய்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையும் தங்கள் நாட்டுக்கும் கட்டணமில்லா விசா சேவையை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அந்நாடு சீன பயணிகளுக்கு விசா சேவை இலவசம் என அறிவித்தது. இதனால் தாய்லாந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இப்படியான நிலையில் இந்தியா மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை தங்கள் நாட்டுக்கு கட்டணமில்லா விசா சேவையை பயன்படுத்தி வரலாம் எனவும், அதிகப்பட்சம் 30 நாட்கள் வரை தங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நடப்பாண்டு தாய்லாந்து அரசு 28 மில்லியன் சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டுக்கு வரவழைக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை கிட்டதட்ட 12 லட்சம் மக்கள் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். முதல் 3 இடங்களில் மலேஷியா, சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளது. புத்தபூமியான தாய்லாந்தில் கிட்டதட்ட 7 கோடி மக்கள் வசிக்கின்றனர்.


கிட்டதட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த மடாலயங்கள், வானுயர புத்தர் சிலைகள் என எங்கும் புத்த சாயலாகவே இருக்கும். சென்னையில் இருந்து கிட்டதட்ட 3 மணி நேரத்தில் நாம் தாய்லாந்து தலைநகரான பேங்காக் நகருக்கு சென்று விடலாம். தாய்லாந்து என்றாலே நம்மில் பலருக்கு மசாஜ் தான் நினைவுக்கு வரும். ஆனால் அதைவிட அங்கு அழகிய விஷயங்கள் பல உள்ளது. எனவே கட்டணமில்லா விசா சேவையை பயன்படுத்தி தாய்லாந்து நாட்டுக்கு பயணம் செய்ய தயாராகுங்கள்..! 




மேலும் படிக்க: SriLanka:”இனி ஈசியா போலாம் இலங்கைக்கு” - இலவச விசா அறிவிப்பு - ஆனால் இந்த நாடுகளுக்கு மட்டும்தான்!