இலங்கை நாட்டுக்கு செல்ல இலவச விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


இந்தியாவில் இருந்து எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் விசா என்பது முக்கியமான தேவையாக உள்ளது. சுற்றுலா, வேலை தொடர்புடைய வகைகளில் விசா எனப்படும் நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. இது குறிப்பிடத்தகுந்த காலம் அந்நாட்டில் நாம் இருக்க செல்லுபடியாகும். விசா காலாவதியாகும் பட்சத்தில் அதனை நீட்டித்து கொள்ளவும் வசதிகள் உள்ளது. ஆனால் இதனைப் பெற பல்வேறு கட்ட நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். தூதரகங்களில் கால் கடுக்க விசாவுக்காக நிற்பவர்களை நம் பார்த்திருக்கலாம். 


ஆனால் வெளிநாடு செல்ல இலவசமாக விசா என்ற அறிவிப்பை கேட்டால் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். அப்படி ஒரு அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. இந்திய வரைபடத்தில் ஒரு சிறிய கண்ணீர்த் துளி வடிவிலான தீவு நாடான இலங்கை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது.  இயற்கை, கலாச்சாரம் மற்றும் சமையல் இன்பங்களால் நிரம்பிய இந்த அழகான தேசம் எட்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களைக் கொண்டுள்ளது. சுற்றிலும் கடல் சூழந்த இலங்கை இயற்கை எழில் சூழ்ந்த நிலப்பரப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 




இதன் மூலம் இந்தியர்கள் இலங்கைக்கு இலவச விசா மூலம் சென்று வரலாம். மேலும் இந்தியா மட்டுமின்றி சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு செல்ல இலவச விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதலுடன் இந்த திட்டம் மார்ச் 31 தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது என்றும் அறிவித்துள்ளது.


இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், இதனடிப்படையில், விசாவை இலவசமாக வழங்குவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு முன்னோடித் திட்டமான இந்த திட்டம் 2024 மார்ச் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டில் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை சந்தித்த இலங்கை நாட்டில், அதனை மீட்டெடுக்க அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு வகையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது  குறிப்பிடத்தக்கது.