இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடந்து வரும் போர், மேற்காசியாவை மிக பெரிய நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போரால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.


காசாவில் தீவிரமடையும் போர்:


பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 8,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள், பெண்கள் ஆவர். காசாவில் நடந்து வரும் போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு டிரக் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஐநா வழங்கி வந்தது. 


ஆனால், போர் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவில் தேவையான அளவுக்கு அவசர உதவி கிடைப்பதில்லை என ஐநா தெரிவித்துள்ளது. சின்னஞ்சிறு பகுதியான காசாவில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் படி இஸ்ரேல் ராணுவம் கேட்டு கொண்ட நிலையில், அப்பாவி மக்கள் தெற்கு காசாவை நோக்கி சென்றனர். 


போர் நிறுத்தத்துக்கு அழைப்பு:


ஆனால், தற்போது தெற்கு காசாவை இணைக்கும் முக்கிய சாலையிலும் இஸ்ரேல் தாக்குதலை தொடுத்திருப்பதாகவும் இதனால் பாலஸ்தீன மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரி அரபு நாடுகளும் ஐநாவும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், போரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வதிலேயே இஸ்ரேல் முனைப்பு காட்டி வருகிறது.


இந்த நிலையில், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "காசாவில் போர் நிறுத்தப்படாது" என்றார்.


"போரில் வெற்றி பெறும் வரை இஸ்ரேல் போராடும்"


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் சரணடைவதற்கு சமம். போர் நிறுத்தத்திற்கு விடப்படும் அழைப்புகள், இஸ்ரேல் ஹமாஸிடம் சரணடைய வேண்டும் என்பதற்கு சமம். பயங்கரவாதத்திற்கு சரணடைய வேண்டும் என்பதற்கு சமம். அது நடக்காது. இந்தப் போரில் வெற்றி பெறும் வரை இஸ்ரேல் போராடும்" என்றார்.


போர் நிறுத்தத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து அமெரிக்கா, "இப்போதைக்கு போர் நிறுத்தம் சரியான பதிலாக இருக்கும் என்று நாங்கள் நம்பவில்லை" என கூறியுள்ளது. இதுகுறித்து விரிவாக பேசியுள்ள அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, "காசாவில் போர் நிறுத்தத்துக்கு பதில் அவசர உதவிகளை கொண்டு செல்ல போரை இடைநிறுத்தம் செய்ய பரிசீலிக்க வேண்டும்" என்றார்.