நான் எப்போது எனது அப்பாவின் மகள்தான், ஆனாலும் எனக்கென்று சொந்த முடிவுகள் உள்ளன என்று தாய்லாந்து நாட்டிற்கு பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெடோங்டர்ன் ஷினவத்ரா தெரிவித்துள்ளார். 


மீண்டும் ஆட்சிக்கு வரும் ஷினவத்ரா வம்சம்:


தாய்லாந்து நாட்டின் நாடாளுமன்றமானது,  பெடோங்டர்ன் ஷினவத்ராவை பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளது, தாய்லாந்தின் மிகவும் பிரபலமான அரசியல் பிரமுகர்களில் ஒருவரான அவரது தந்தை தக்சின் ஷினவத்ராவுடன் தொடங்கிய அரசியல் வம்சத்தின் பாரம்பரியம் மீண்டும் தொடர்கிறது.


தக்சின், தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர், 2006 இல் ஒரு இராணுவ புரட்சி மூலம் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த ஆண்டு நாடு கடத்தப்பட்டு நாடு திரும்பிய அவரது கோடீஸ்வரரான தந்தை மற்றும் நாடுகடத்தப்பட்ட அவரது அத்தை யிங்லக் ஷினவத்ரா ஆகியோருக்குப் பிறகு, ஷினாவத்ரா குடும்பத்திலிருந்து தாய்லாந்தின் மூன்றாவது தலைவராக பெடோங்டர்ன்  தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 


இளம் வயது பிரதமர்:


தாய்லாந்தின் அத்தைக்குப் பிறகு தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதம மந்திரியாகவும் மற்றும் 37 வயதில் நாட்டின் இளைய தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.


இதற்கு முன், அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரெத்தா தவிசின் பிரதமராக பதவி வகித்து வந்தார். அவர், சிறைக்கு அனுப்பப்பட்ட ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தமைக்காக பெரும் சர்ச்சை உருவானது. இதையடுத்து, அவர் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பெடோங்டர்ன்   பிரதமராக  தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஆதரவாக , நாடாளுமன்றத்தில்  319 வாக்குகளாலும், எதிராக 145 வாக்குகளாலும், 27 பேர் வாக்களிக்காமலும் இருந்ததாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


”வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன்”


Pheu Thai என்ற கட்சியின் தலைவராக உள்ளார். பிரதமராக தேர்வு செய்யப்பட்டது குறித்து தெரிவித்ததாவது.. எனக்கு வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. இந்த தருணம், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பு மூலம், நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன். என்னால், நாட்டிற்கு முடிந்ததை செய்வேன். நான் எப்போது எனது அப்பாவின் மகள்தான், ஆனாலும் எனக்கென்று சொந்த முடிவுகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். 


Also Read: Water In Mars: செவ்வாய் கோளில் கடலே உள்ளது: நாசா விண்கலம் அசத்தல் கண்டுபிடிப்பு..!