Pakistan Cops Killed: பாகிஸ்தானில் பதற்றமான கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள,  காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பாகிஸ்தான் காவலர்கள் கொல்லப்பட்டனர்.  6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள சவுத்வான் காவல் நிலையம் மீது, நள்ளிரவில் பஷ்டூன் போராளிகள் ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காவல் நிலையத்திற்கு உள்ளே சென்றும் தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 


கொல்லப்பட்டவர்களில் ஸ்வாபியின் எலைட் போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஆறு காவலர்களும் அடங்குவர். முந்தைய ஆண்டு பல நடைபெற்ற பல தாக்குதல்களை கருத்தில் கொண்டு,  தேர்தல் பணிகளில் உள்ளூர் காவல்துறைக்கு ஆதரவாக அப்பகுதியில்எலைட் போலீஸ் பிரிவு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில் 30-க்கும்  மேற்பட்ட தீவிரவாதிகள் காவல் துறையின் 3 திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 






எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை:


பாகிஸ்தானில் வரும் 8ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது கவனிக்க வேண்டியது. கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தானின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள், தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடைபெற்றுள்ள காவல் நிலையத்தின் மீதான இந்த தாக்குதலுக்கு, தற்போது வரை எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த 2022ம் ஆண்டு பாகிஸ்தான் தலிபான்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து,  பாதுகாப்புப் பணியாளர்களை நோக்கி இஸ்லாமிய போராளிகளின் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. 


தொடரும் தாக்குதல்கள்:


புதன்கிழமை, கைபர்-பக்துன்க்வாவில் ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நாளில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அவரது கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் மற்றொரு அரசியல் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னதாக வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு காவல் நிலைய வளாகத்திற்குள் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது ஆறு பேர் கொண்ட தற்கொலைப் படை வெடிகுண்டு நிரப்பப்பட்ட டிரக்கை ஓட்டிச் சென்றதில் குறைந்தது 23 வீரர்கள் உயிரிழந்தனர்.