வருகின்ற 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நிச்சயமாக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


வேலூர் மாவட்டத்தில் ’என் மண் என் மக்கள்’ யாத்திரை பயணத்தை தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடந்த 9 ஆண்டுகள் ஆட்சி சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் விதமாக அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடை பயணத்தை கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கினார். இந்த பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க, இந்த பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கியது. 


பல்வேறு சூழ்நிலைகளை கடந்து அண்ணாமலை யாத்திரையை செயல்படுத்தி வருகிறார். நகரத்தின் உள் பகுதிகளில் நடை பயணமாக 1700 கிலோ மீட்டர் தூரமும், வாகன மார்க்கமாக 900 கிமீ தூரமும் என மொத்தம் ஐந்து கட்டங்களாக 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த நடை பயணம் திட்டமிடப்பட்டது. பல கட்டங்களை கடந்து கடந்த ஜனவரி 20ம் தேதி நடை பயணம் நிறைவு பெற இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களுக்காக ’என் மண் என் மக்கள்’ யாத்திரை பயணம் தடை மற்றும் ஒத்திவைக்கப்பட்டதால் தற்போது பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த நடை பயணத்தை முடிக்க தமிழ்நாடு பாஜக திட்டமிட்டுள்ளது.


இந்தநிலையில் நேற்று வேலூரில் பிரசார வாகனத்தில் பேசிய அண்ணாமலை, “ வருகின்ற 2026 ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி வெற்றிபெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தால் கொய்யாபழத்திற்கும் பிரதமர் மோடி புவிசார் குறியீடு அறிவிப்பார். தமிழ்நாட்டியில் 9 ஆண்டுகளாக காமராஜர் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டப்பட்டது. அதன்பிறகு தமிழ்நாட்டியில் ஆட்சி செய்த எந்தவொரு முதலமைச்சர்களும் அணைகள் கட்டவில்லை. 


கிடப்பில் போடப்பட்ட அரசு வேலை: 


அணைக்கட்டு தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி பங்காளிகள் சண்டைகள் போட்டு கொண்டு வருகிறாஎகள். திமுகவினர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல் சட்டத்திற்கு புறம்பாக கல்குவாரிகளில் 200 கோடிக்கு மேல் அதிமுகவினர் சம்பாதித்து விட்டதாக திமுகவினர் கூறுகின்றனர். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடந்த குரூப் - 1, குரூப் -2, குரூப்- 4 தேர்வுகள் நடந்து முடிவுகள் வந்த பிறகும் அவர்களுக்கு பணி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 






குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை நிச்சயம்:


வருகின்ற 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நிச்சயமாக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். கடந்த 9 தலைமுறைகளாக எனது குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் பணியாற்றவில்லை. எனக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்தது. இந்த நிலைமை மாறி அரசு வேலை இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை நிச்சயம் வழங்கப்படும். 


வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி சார்பில் ஏ.சி. சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார். தாமரை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்யுங்கள்” என்று பேசினார்.