TN Minister Portfolio Change: அமைச்சர் ரகுபதி வகித்து வந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம்:

அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ரகுபதி வசம் மாற்றம்.  அமைச்சர் ரகுபதியிடமிருந்த சட்டத்துறை துரைமுருகன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மிகவும் வலுவான இலாகாவான, கனிமத்துறை துரைமுருகனிடம் இருந்து பறிக்கப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, துரைமுருகன் நீர்வளத்துறை உடன் சட்டத்துறையையும் கூடுதலாக கையாள உள்ளார். அதேநேரம், ரகுபதி இயற்கை வளம் உள்ளிட்ட இயற்கை வளம் துறையை கவனிக்க உள்ளார்.

அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்:

அண்மையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து,  தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டு பால்வளம் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, தற்போது மூத்த அமைச்சர்களான துரைமுருகன் மற்றும் ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் வென்று, மீண்டும் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் தீவிரமாக உள்ளார். இதன் காரணமாக கட்சி ரீதியாகவும், அரசின் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

துரைமுருகனை முடக்க திட்டமா?

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதலே, துரைமுருகன் நீர் மற்றும் கனிமவள இலாகாக்களை தன்வசம் வைத்துள்ளார். இந்த நான்கு ஆண்டுகளில் பாலாறில் அதிகளவில் மணல் கொள்ளை நடப்பதாகவும், தமிழ்நாட்டின் கனிமவளங்கள் சூறையாடப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தான், அமைச்சர் துரைமுருகனின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் போது ஊழல் குற்றச்சாட்டுகள் திமுகவிற்கு பெரும் பிரச்னையாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தொடர்ந்து சர்சை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி வந்த அமைச்சர் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேறியுள்ளனர். அதேபாணியில் குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி வயது மூப்பு காரணமாகவும் அவதிப்பட்டு வரும் துரைமுருகனை ஓரங்கட்டும் வகையிலேயே இந்த இலாகா மாற்றம் நிகழ்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.