Sundar Pichai : தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை, உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இந்நிலையில், அவருக்கு ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
உலக நாடுகளில் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார ஆய்வறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், அமேசான், அக்சன்ஜர் போன்ற நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (alphabet) நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
1,400 ஊழியர்கள் கடிதம்
இதுமட்டுமின்றி பல நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 1,400 ஊழியர்கள் கடிதம் எழுதி உள்ளனர். சுமார் 1,400 ஊழியர்கள் சேர்ந்து கடிதத்தில் கையெழுத்திட்டு சுந்தர் பிச்சைக்கு அனுப்பி உள்ளனர். பல கோரிக்கைகைளை கடிதத்தில் முன்வைத்துள்ளனர்.
அதன்படி, ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் சேர்க்க முயற்சிக்க வேண்டும். அதேபோன்று ஒருவரை வேலையை விட்டு நீக்கும்போது அவர்களிடம் பரிந்துரைகளை கேட்க வேண்டும். ஏற்கனவே வேலையை விட்டு நீக்கப்பட்ட ஆல்பாபெட் ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊழியர்களை பணியை விட்டு நீக்காமல், நிறுவனத்திற்குள்ளே இடமாற்றம் செய்ய முயற்சிக்க வேண்டும்.
5 கோரிக்கைகள்
இதனை அடுத்து, போர் நடைபெறும் நாடுகளான உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளை சேர்ந்த ஆல்பாபெட் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்படுவதில் இருந்து தவிர்க்க வேண்டும். அவர்கள் அந்த நாட்டிற்கு தற்போது செல்வது பாதுகாப்பாக இருக்காது. அதனால் அவர்களை பணிநீக்கம் செய்வதை அரவே தவிர்க்க வேண்டும். இதனை தொடர்ந்து, மகப்பேறு போன்று விடுமுறைகளில் இருப்பவர்களுக்கு பணிநீக்கம் நோட்டீஸ் அனுப்புவதை நிறுத்த வேண்டும்.
அவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பும்போது, அவர்களிடம் பரிந்துரைகள் கேட்டு அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலினம், இனம், மதம், சாதி, வயது போன்ற எந்த முறையிலும் நிறுவனத்தில் பாகுபாட்டை அனுமதிக்கக் கூடாது என்று கடித்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க