பணம் செலுத்தாத ட்விட்டர் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளூ டிக் ஏப்ரல் 1ம் தேதி முதல் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெரிஃபைடு கணக்கிற்கான அந்த ப்ளூ டிக்கை தொடர்ந்து வைத்திருக்க, சந்தாதாரராக மாற பயனாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


எலான் மஸ்க் வசம் ட்விட்டர்:


நீண்ட இழுபறி மற்றும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு வாங்கினார். அதைதொடர்ந்து, அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களையும் அறிவித்தார். அதில் குறிப்பிடத்தக்கது, ட்விட்டர் பயனாளர்களின் வெரிஃபைடு கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்கை தொடர்ந்து பெற இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்பதாகும். இதுகுறித்து பேசியிருந்த எலான் மஸ்க் “இதுவரை வழங்கப்பட்ட டிக் குறியீடு ஊழல் மற்றும் முட்டாள்தனமாக இருப்பதாகவும், நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் அந்த டிக் குறியீடு விரைவில் அகற்றப்படும்” என்றும் கூறியிருந்தார்.


ஏப்ரல்-1 கடைசி நாள்:


இந்நிலையில் ”பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளூ டிக் ஏப்ரல் 1ம் தேதி முதல் அகற்றப்படும். அந்த வெரிஃபைடு ப்ளூ டிக் குறியீடு தொடர்ந்து வேண்டுமானால் பயனாளர்கள் சந்தாதாரர்களாக மாற வேண்டும்” என ட்விட்டர் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ப்ளூ டிக்கிற்கான சந்தா திட்டத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.


கட்டண விவரம்:


பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, இணையத்தில் ரூ.650 மற்றும் மொபைல் சாதனங்களில் ரூ.900 எனும் கட்டணத்தில் கிடைக்கிறது. இதேபோன்று, இந்தக் கணக்குகள் வணிகமாகவோ அல்லது லாப நோக்கத்திற்காகவோ இருந்தால் தங்கச் சரிபார்ப்பு அடையாளத்தையும் சதுர அவதாரத்தையும், குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பெறலாம். அரசு அமைப்புகளுக்கு கிரே குறியீடு வழங்கப்படுகிறது. 


காரணம் என்ன?


கடனில் மூழ்கியிருக்கும் ட்விட்டர் நிறுவனத்தை, அதன் வருவாயை அதிகரிப்பதன் மூலம் மீட்டெடுக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். ட்விட்டர், மெட்டா, ஆல்பாபெட் மற்றும் ஸ்னாப் போன்ற விளம்பரம் சார்ந்த இணைய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஆன்லைன் விளம்பர சந்தையில் ட்விட்டர் நிறுவனமும் தொடர்ந்து மந்த நிலையில் இருந்து வருகிறது.


வருவாயை அதிகரிக்க திட்டம்:


இந்நிலையில், ட்விட்டரில் ப்ளூ டிக்கிற்கு சந்தா என்பது விளம்பரத்திற்கு அப்பாற்பட்டு அதன் வருவாய் வழிகளை பல்வகைப்படுத்த நிறுவனத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். நவம்பர் 2022-ல் ஊழியர்களிடம் பேசிய எலான் மஸ்க், நிறுவனத்தின் வருவாயில் குறைந்தது பாதியாவது சந்தாக்களில் இருந்து வர வேண்டும் என்று விரும்புவதாகக் கூறியிருந்தார்.  இதனால் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் வருவாய்க்காக, விளம்பரங்களை நம்புவதைக் குறைத்துள்ளது. பல்வேறு விதமான சந்தா திட்டங்கள் மூலம் தனது வருவாயை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.