Sri Lanka Presidential Election LIVE: இலங்கை அதிபர் தேர்வில் ரணில் வெற்றி
பொதுவாக இலங்கையில் மக்களால் மட்டுமே அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது இலங்கையிலுள்ள சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாலே அதிபர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
இலங்கை அதிபராகிறார் ரணில் விக்கிரமசிங்க.
130 வாக்குகளுக்கு மேல் ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணில் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். இன்னும் சில நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாக உள்ளது.
இன்னும் சில நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
வாக்கு எண்ணும் பணி நிறைவு பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணில் முன்னிலை வகித்து வருகிறார்.
நாடாளுமன்ற கூட்டத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொழும்புவில் உள்ள அதிபர் அலுவலகத்தில் மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பில் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா வாக்களித்துள்ளார்.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாக்களித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் எம்பியுமான செல்வராசா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளரான அமைச்சர் ஹரன் வாக்களித்துள்ளார்.
இலங்கை எம்பிக்கள் ஒருவர் பின் ஒருவராக வாக்களித்து வருகின்றனர்.
இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் தொடங்கியது.
புதிய அதிபரை தேர்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் சற்ற நேரத்தில் வாக்குபதிவு தொடங்க உள்ளது. வாக்குபதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகயா, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டணியின் சில எம்பிக்கள் ரணிலுக்கு வாக்களிக்க உள்ளதாக அமைச்சர் ஹரின் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் அதிபர் தேர்வில் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆதரவு அளித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
நாடாளுமன்ற அதிபர் தேர்வில் துலாஸ் அலகபெருமவுக்கு ஆதரவு அளித்த தமிழ் தேசிய கூட்டணி, அதிபராக தேர்வு செய்யப்பட்டால் பொருளாதார ஜனநாயக சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும், 21ஆவது சட்ட திருத்தம் அமல்படுத்த அழுத்தம் தரப்படும் என அறிவித்துள்ளது.
காலை 10:00 மணிக்கு கூடும் நாடாளுமன்ற கூட்டத்தில் எம்பிக்கள் கூடி அதிபரை தேர்வு செய்ய உள்ளனர்.
நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து நேற்று விலகிய நிலையில், ராஜபக்ச கட்சியின் துலாஸ் அலகபெரும, இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும் முறையை ஒழிக்க 70 சதவிகித மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவார் என அமைச்சர் ஹரின் பெர்னான்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு போட்டிக் களத்தில் உள்ள இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
Background
பரபரப்பான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது உலக நாடுகளை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றார்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. நிலைமை இப்படியிருக்க கடந்த வாரம் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். ஆனால் தகவலறிந்து கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தப்பியோடி நாட்டை விட்டு வெளியேறினார். முதலில் மாலத்தீவுக்கு சென்ற அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது கோத்தபய சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்துள்ளார்.
ரணில் தற்போது இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை தூதரகம் வாயிலாக இலங்கை சபாநாயகருக்கு அனுப்பி இருந்தார். புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக இலங்கை நாடாளுமன்றம் ஜூலை 20 ஆம் தேதி கூடும் என்றும், அன்றைய தினம் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
பொதுவாக இலங்கையில் மக்களால் மட்டுமே அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது இலங்கையிலுள்ள சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாலே அதிபர் தேர்வு செய்யப்படவுள்ளார். இதனிடையே வேட்புமனு தாக்குதல் நேற்று நடைபெறவிருந்த நிலையில் அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாச விலகுவதாக அறிவித்தார். அதேபோல் இலங்கையின் புதிய அதிபராக டலஸ் அழகப்பெரும தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அதிபர் பதவிக்கான போட்டிக்களத்தில் அனுரகுமார திசாநாயக்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -