பிரிட்டனில் மனிதர்களை கடித்து போக்குக் காட்டிய அணிலை அந்நாட்டு அரசு கருணைக்கொலை செய்துள்ளது
பொதுவாக அணில்கள் என்றால் சாந்தமான விலங்கினம் என்போம். ஆனால் சாம்பல் அணில்கள் அப்படியானவை அல்ல. சாம்பல் அணில்களை கண்டால் பொதுமக்களே ஓடி ஒளிவார்கள். திடீர் தாக்குதலால் திக்குமுக்காட செய்யும் சாம்பல் அணில்கள். சாம்பல் அணில்கள் ஆக்ரோஷமான அணில் இனமாகும். இது 1870களில் வட அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு வந்தன. இந்த அணில்களால் சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டது. அதாவது இந்த வகை அணில்கள் மரங்களின் பட்டையை அதிகளவில் உணவுக்காக சேதப்படுத்துவதால் மரங்களின் அழிவைத் தேடித்தரும். அதனால் இந்த வகை அணிகள் மிகவும் அடர்த்தியான காடுகளில் இருக்கவே ஏற்றவை. இதனால் மக்கள் வசிக்கும் இடங்களிலும் , குறைந்த அடர்த்தி கொண்ட சிறிய காடுகளிலும் இந்த அணில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மனிதர்களை இந்த அணில்கள் கடித்துத் தாக்கின. இதனால் இந்த அணிலை பிரிட்டன் அரசாங்கம் தடை செய்தது. குறிப்பாக சாம்பல் அணிலை காட்டுக்குள் விடக்கூடாது என்றும் ஆணையிட்டிருந்தது. இந்நிலையில் பிரிட்டனின் பிளின்ட்ஷயரில் உள்ள பக்லியில் ஒரு சாம்பல் அணில் போக்குக் காட்டியுள்ளது.
ஒரு அணிலால் இரண்டு நாட்களாக அப்பகுதி மக்கள் வெளியே வரவே அச்சமடைந்துள்ளனர். எங்கிருந்து வரும் என்றே தெரியாமல் படாரென கடித்துத் தாக்கும் அணிலை பிடிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். உள்ளூர் மக்கள் ஸ்ட்ரைப் என்று அந்த அணிலை அழைக்கின்றனர். இந்நிலையில் ஸ்ட்ரைப் அணிலுக்கு கட்டம் கட்டிய கால்நடை மருத்துவர்கள் பொறி வைத்து அணிலை பிடித்தனர். பிடித்த அணிலை காட்டுக்குள்ளும் விட முடியாது என்பதால் அந்த அணில் கருணைக்கொலை செய்யப்பட்டது.
சாம்பல் அணில் குறித்து பேசிய ஒருவர், இந்த அணில் அவ்வப்போது தோட்டத்துக்குள் வந்து தானியங்களை சாப்பிடும். ஒருநாள் திடீரென என்னைக் கடித்துவிட்டது. அதன் பின்னர் என்னுடைய நண்பனையும் தாக்கியது. அந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் 18 மேற்பட்டோரை அந்த அணில் தாக்கியது என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்